பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்


பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 25 Jun 2017 10:45 PM GMT (Updated: 25 Jun 2017 5:47 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில், பாலியல் வன்கொடுமையினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும், என கலந்தாய்வு கூட்டத்தில் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

தூத்துக்குடி,

சென்னை உயர்நீதிமன்றம்–இளைஞர் நீதிக்குழுமம் உத்தரவுப்படி குழந்தைகள் பாதுகாப்பு குறித்த கலந்தாய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ், மாவட்ட முதன்மை நீதிபதி ராஜசேகர் ஆகியோர் தலைமை தாங்கி ஆய்வு செய்தனர்.

கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு சட்டங்களை திறம்பட நடைமுறைப்படுத்துவது குறித்து கேட்டறிந்தனர். குழந்தைகள் நலக்குழுவினர், குழந்தை தொழிலாளர்கள், பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தைகள், பாதுகாவலர்களால் கைவிடப்பட்ட குழந்தைகள், பாலியல் வன்கொடுமையினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தினர். சட்டத்துக்கு முறன்பட்ட இளம் சிறார்களை போலீசார் சிறப்பு சிறார் காவல் பிரிவு மூலம் அணுக வேண்டும். மாவட்டத்தில் உள்ள 59 ஆதரவற்ற குழந்தைகளின் இல்லங்களில் உள்ள அடிப்படை வசதிகள், குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த விவரங்களை கேட்டறிந்தனர். குழந்தைகளின் பாதுகாப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். குழந்தை திருமணங்கள் இனி வரும் காலங்களில் நடைபெறாமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

கலந்து கொண்டவர்கள்

கூட்டத்தில் தலைமை குற்றவியல் நீதிபதி கவுதமன், மாவட்ட சட்டப்பணிகள்ஆணைக்குழு செயலாளர் சாமுவேல் பெஞ்சமின், தூத்துக்குடி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு அண்ணாமலை, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) ராஜையா, அரசு ஆஸ்பத்திரி உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் ஜோதிகுமார், மாவட்ட சமூகநல அலுவலர் ஜெயசூர்யா, தட்டப்பாறை அரசினர் குழந்தைகள் இல்ல கண்காணிப்பாளர் சகிலாபானு உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story