ஜனாதிபதி தேர்தலில் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெறுவார்


ஜனாதிபதி தேர்தலில் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெறுவார்
x
தினத்தந்தி 25 Jun 2017 10:30 PM GMT (Updated: 2017-06-26T00:33:11+05:30)

ஜனாதிபதி தேர்தலில் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெறுவார் எச்.ராஜா பேட்டி

ராமநாதபுரம்,

ராமநாதபுரத்தில் கடந்த சில நாட்களுக்குமுன் மர்ம கும்பலால் தாக்கப்பட்ட பா.ஜ.க. நகர் செயலாளர் அஸ்வின்குமார், அவருடைய தந்தை மலைமேகம் ஆகியோர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார். அதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:– பா.ஜ.க. நகர் செயலாளர் அஸ்வின்குமாரை கொலை செய்வதாக முகநூலில் பதிவு செய்தவர்களின் பின்னணியில் உள்ளவர்களை போலீசார் கைதுசெய்யவில்லை. இதனாலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது. அஸ்வின்குமார் வீடு தாக்கப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை. அரிவாளால் வெட்டப்பட்டு காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் நபர் அந்த நேரத்தில் மதரசாவை தாக்கினார் என்று புகார் அளித்ததை ஏற்று காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த பொய்யான புகாரினை காவல்துறை உடனடியாக தள்ளுபடி செய்திருக்க வேண்டும்.

தமிழகத்தில் இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது. இந்த சூழ்நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இல்லாவிட்டால் இதில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று பா.ஜ.க. கோரிக்கையை முன்வைக்கும். ஜனாதிபதி தேர்தலில் 75 சதவீத வாக்குகள் பெற்று பா.ஜ.க. வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெறுவார். இவ்வாறு அவர் கூறினார். அப்போது பா.ஜ.க. மாவட்ட தலைவர் முரளிதரன், மாவட்ட செயலாளர் ஆத்மா கார்த்திக் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story