வாடிப்பட்டி அருகே நான்குவழிச்சாலையில் ரோட்டோரம் கிடந்த பச்சிளம் குழந்தை


வாடிப்பட்டி அருகே நான்குவழிச்சாலையில் ரோட்டோரம் கிடந்த பச்சிளம் குழந்தை
x
தினத்தந்தி 25 Jun 2017 10:00 PM GMT (Updated: 2017-06-26T00:52:33+05:30)

வாடிப்பட்டி அருகே நான்குவழிச்சாலையின் ரோட்டோரம் கிடந்த பச்சிளம் குழந்தையை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக சேர்த்தனர்.

வாடிப்பட்டி

வாடிப்பட்டி அருகே தாதம்பட்டி புளியங்கண்மாய் எதிரே திண்டுக்கல்–மதுரை தேசியநெடுஞ்சாலை 4 வழிச்சாலையில், விராலிப்பட்டி சேவை சாலையில் உள்ள ஒரு புளியமரத்தடியின் கீழ் பிறந்து 5 நாட்கள் ஆன அழகிய ஆண் குழந்தை கிடந்தது. அந்த குழந்தை ஒரு ஜவுளிக்கடை விளம்பரத்துடன் கூடிய வெள்ளை நிற துணிப்பையில் வைத்து ஆதரவற்ற நிலையில் போட்டு செல்லப்பட்டு இருந்தது.

நேற்று மதியம் அந்த வழியாக சென்றவர்கள் பையில் குழந்தை இருப்பதை பார்த்து, அக்கம்பக்கம் குழந்தையின் தாயை தேடினர். ஆனால் கண்ணிற்கு எட்டிய தூரம் வரை ஆட்கள் நடமாட்டம் இல்லாததால், பதைபதைத்த நிலையில் அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

ஆஸ்பத்திரியில் அனுமதி

இதையடுத்து அங்கு வந்த வாடிப்பட்டி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி, பயிற்சி சப்–இன்ஸ்பெக்டர் முரளி, வருவாய் ஆய்வாளர் முத்துசங்கர் உள்பட போலீசார் குழந்தையை கைப்பற்றி விசாரணை நடத்தியதில், எந்த விவரமும் தெரியவில்லை. மேலும் ரோட்டின் ஓரம் குழந்தை எவ்வளவு நேரம் கிடந்தது என்றும் தெரியவில்லை. அதனால் குழந்தையை வி‌ஷ பூச்சிகள், எறும்புகள் கடித்துள்ளதா என்று சோதித்த போலீசார் குழந்தையை வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டு மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரியில் உள்ள குழந்தைகள் அவசர சேவைப் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி முத்துராலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் வாடிப்பட்டி போலீசார் குழந்தையின் பெற்றோர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள், குழந்தை கடத்தி வரப்பட்டதா? என்று விசாரித்து வருகின்றனர்.


Next Story