மண் அரிப்பால் தூணில் பாதிப்பு: சோழசிராமணி கதவணை மின்நிலைய பாலத்தில் போக்குவரத்து நிறுத்தம்


மண் அரிப்பால் தூணில் பாதிப்பு: சோழசிராமணி கதவணை மின்நிலைய பாலத்தில் போக்குவரத்து நிறுத்தம்
x
தினத்தந்தி 25 Jun 2017 11:00 PM GMT (Updated: 2017-06-26T01:08:37+05:30)

மண் அரிப்பால் பாலத்தின் தூணில் 20 சதவீதம் வரை பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், சோழசிராமணி கதவணை மின் நிலைய பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருப்பதாக அமைச்சர் தங்கமணி கூறினார்.

பரமத்திவேலூர்,

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே சோழசிராமணி கிராமத்துக்கும், ஈரோடு மாவட்டம் பாசூருக்கும் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை மின்நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கதவணை மின்நிலையம் அமைக்கப்பட்டபோது சுமார் 7 மீட்டர் அகலத்தில் பாலம் ஒன்று கட்டப்பட்டது.

இந்த பாலம் வழியாக தினசரி அரசு பஸ்கள், பள்ளி-கல்லூரி பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் பாலத்தை தாங்கி நிற்கும் தூண்கள் வழியாக நீர்மின் நிலையத்தில் இருந்து சீறிப்பாய்ந்து செல்லும் தண்ணீரால் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பாலத்தின் 3-வது கான்கிரீட் தூண் பூமியில் முழுமையான பிடிமானம் இல்லாமல், அந்தரத்தில் தொங்குகிறது. இதனால் பாரம் தாங்காமல் பாலம் இடிந்துவிழும் அபாயம் இருப்பதால், அந்த தூணை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அமைச்சர் தங்கமணி ஆய்வு

இந்நிலையில் நேற்று தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி அந்தரத்தில் தொங்கும் தூண் மற்றும் மண் அரிப்பு ஏற்பட்டுள்ள பகுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- சோழசிராமணி-பவானி கட்டளை கதவணை மூலம் 30 மெகாவாட் திறன் கொண்ட மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த கதவணை பாலத்தின் 3-வது தூணில் 20 சதவீதம் வரை மண் அரிப்பு காரணமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தண்ணீரின் வேகம் காரணமாக பாறையின்மேல் அமைக்கப்பட்ட தூணில் இந்த அரிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த பணி கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நடைபெற்று உள்ளது. இந்த பணியில் ஈடுபட்ட ஒப்பந்ததாரராக இருந்தாலும் சரி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளாக இருந்தாலும் சரி, உரிய விசாரணை நடத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

போக்குவரத்து நிறுத்தம்

பொதுமக்கள் இதுகுறித்து பீதி அடையவேண்டிய அவசியம் இல்லை. பாதுகாப்பு கருதி முன்எச்சரிக்கையாக போக்குவரத்தை நிறுத்தி உள்ளோம். இருசக்கர வாகனங்கள் மட்டும் இந்த பாலம் வழியாக செல்ல அனுமதிக்கப்படும். இதேபோல 14-வது தூணிலும் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. பாலத்தின் 15 தூண்களும் புவியியல் வல்லுனர்கள் கொண்டு ஆய்வு செய்யப்பட்டு, இன்னும் ஒருமாத காலத்திற்குள் சீரமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம், போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, செல்வகுமார சின்னையன் எம்.பி., மின்வாரிய அதிகாரிகள் உள்பட பலர் உடனிருந்தனர்.


Related Tags :
Next Story