அம்பத்தூரில் தாசில்தார் வீட்டில் நகை, பணம் திருடிய வழக்கில் வாலிபர் கைது


அம்பத்தூரில் தாசில்தார் வீட்டில் நகை, பணம் திருடிய வழக்கில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 25 Jun 2017 10:45 PM GMT (Updated: 2017-06-26T01:31:15+05:30)

அம்பத்தூரில் தாசில்தார் வீட்டில் நகை, பணம் திருடிய வழக்கில் வாலிபர் கைது, 52 பவுன் நகை மீட்பு

ஆவடி

அம்பத்தூர் கிருஷ்ணாபுரம் மாந்தோப்பு தெருவைச் சேர்ந்தவர் புனிதவதி (வயது 41). இவர், அம்பத்தூர் தாசில்தார் அலுவலகத்தில் தனி தாசில்தாராக பணியாற்றுகிறார். இவருடைய கணவர் ராஜன், என்ஜினீயர்.

புனிதவதியின் தங்கை சர்மிளா(35). இவருடைய கணவர் குமார், திருப்பத்தூரில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணி செய்து வருகிறார். புனிதவதி, சர்மிளா இருவரின் குடும்பத்தினரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.

கடந்த 17-ந்தேதி புனிதவதி, ராஜன் இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் சர்மிளா, அவருடைய குழந்தை, தாயார் பத்மினி மட்டும் இருந்தனர். அப்போது வீட்டின் பின்பக்க வழியாக நைசாக வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் படுக்கை அறையில் பீரோவில் இருந்த 73 பவுன் நகை மற்றும் ரூ.60 ஆயிரம் பணத்தை திருடிச்சென்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி அம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வந்தனர்.

வாலிபர் கைது

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை அம்பத்தூர் அருகே பட்டரவாக்கம் சாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்ற ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர், ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் செந்தில் நகரை சேர்ந்த பிரதீப்(23) என்பதும், தனி தாசில்தார் புனிதவதி வீட்டில் நகை, பணத்தை திருடியதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

52 பவுன் நகை மீட்பு

அவரிடம் இருந்து 52 பவுன் நகையை பறிமுதல் செய்தனர். மீதம் நகைகளை அடமானம் வைத்து அதில் கிடைத்த பணத்தை செலவு செய்து விட்டதாக போலீசாரிடம் அவர் தெரிவித்தார்.

கைதான பிரதீப் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். பிரதீப் மீது ஏற்கனவே பட்டாபிராம், திருநின்றவூர், பெரியமேடு, கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 

Next Story