ஓ.என்.ஜி.சி. குழாய் உடைந்து கச்சா எண்ணெய், வயல்களில் ஓடியது அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்


ஓ.என்.ஜி.சி. குழாய் உடைந்து கச்சா எண்ணெய், வயல்களில் ஓடியது அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 1 July 2017 4:00 AM IST (Updated: 1 July 2017 1:00 AM IST)
t-max-icont-min-icon

கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. குழாய் உடைந்து கச்சா எண்ணெய், வயல்களில் ஓடியது அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

திருவிடைமருதூர்,

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா கதிராமங்கலம் பகுதியில் கடந்த 12 ஆண்டுகளாக ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சுமார் 7 இடங்களில் ஆழ்துளை எண்ணெய் கிணறுகள் அமைத்துள்ளன. இங்கிருந்து எடுக்கப்படும் கச்சா எண்ணெய் பூமிக்கடியில் குழாய் பதித்து அதன் வழியாக குத்தாலத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பப்படுகிறது. கதிராமங்கலம் பகுதியில் எண்ணெய் குழாய்கள் பதித்து பல ஆண்டுகள் ஆவதால் தற்போது புதிய குழாய்கள் பதிக்கும் பணியை ஓ.என்.ஜி.சி. நிறுவனம் செய்து வருகிறது.

இதற்கு அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கதிராமங்கலத்தில் போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் புதிய குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.இதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை கதிராமங்கலம் கொடியாலம் சாலையில் உள்ள ஓ.என்.ஜி.சி. நிறுவன ஆழ்துளை எண்ணெய் கிணறு அருகே வயல் பகுதியில் செல்லும் குழாய் உடைந்து, அதில் இருந்து கச்சா எண்ணெய் வெளியேறியது. தொடர்ந்து எண்ணெய் வந்து கொண்டே இருந்தது. இந்த கச்சா எண்ணெய் குறுவை சாகுபடி செய்யபட்டுள்ள வயல்களில் வழிந்தோடியது. இதுகுறித்து தகவல் அறிந்த அந்த பகுதி பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து, எண்ணெய் குழாய் பதிப்பதால் நிலத்தடி நீர் மாசுபடிந்து குடிப்பதற்கு நல்ல தண்ணீர் கிடைக்கவில்லை. விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே உடனடியாக எண்ணெய் குழாய் பதிக்கும் பணியை நிறுத்தி விட்டு, கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேற வேண்டும் என்று கூறி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்ட இடத்துக்கு வந்த அதிகாரிகளை செல்ல விடாமல் அங்கு முட்களை போட்டு தடை ஏற்படுத்தினர்.

தகவல் அறிந்து கும்பகோணம் உதவி– கலெக்டர் பிரதீப்குமார், தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அப்போது அதிகாரிகளை, பொதுமக்கள் முற்றுகையிட்டு எண்ணெய் குழாய் உடைப்பு ஏற்பட்ட பகுதிக்கு செல்ல விடாமல் தடுத்தனர். இதை தொடர்ந்து அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த பகுயில் அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் தடுக்க அங்கு போலீசார் மற்றும் அதிரடிப்படையினர், தீயணைப்பு படையினர் குவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story