டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து 2–வது நாளாக பொதுமக்கள் போராட்டம்
அவினாசி அருகே டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து 2–வது நாளாக பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள்.
அவினாசி,
அவினாசியை அடுத்த வெள்ளியம் பாளையம் வீரமாத்தியம்மன் கோவில் அருகே புதிதாக டாஸ்மாக் கடை அமைப்பதற்காக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதை கேள்விப்பட்ட அந்த பகுதி பொதுமக்கள் நேற்று முன்தினம் அந்த கட்டிடத்தின் முன் திரண்டனர். பின்னர் அவர்கள் டாஸ்மாக் கடை அமைய உள்ள கட்டிடத்துக்குள் உட்கார்ந்து, அங்கு கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த அவினாசி போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, வெளியூர் சென்றுள்ள டாஸ்மாக் அதிகாரி வந்த உடன், உங்கள் கோரிக்கைகள் குறித்து பேசிக்கொள்ளலாம் என்று கூறினார்கள். இதைதொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் நேற்று அங்கு டாஸ்மாக் கடை திறக்க இருப்பதாக தகவல் கிடைக்கவே, நேற்று காலை மீண்டும் அந்த பகுதி பொதுமக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் அங்கு டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மதிய நேரத்தில் வெயில் அதிகமாக இருந்ததால் அந்த கடை முன்பு பந்தல் போட்டு உட்கார்ந்தனர்.
அத்துடன் நேற்று மதியம் போராட்டம் நடந்த இடத்திலேயே சமையல் செய்து சாப்பிட்டு போராட்டத்தை தொடர்ந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த அவினாசி போலீசார் மற்றும் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் துரை ஆகியோர் சம்பவ இடம் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, உங்களது கோரிக்கைகளை மனுவாக எழுதி கொடுங்கள். உரிய நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறினார்கள். இதைதொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.