பாடாலூரில் சரக்கு, சேவை வரியை கண்டித்து கடையடைப்பு போராட்டம்
சரக்கு, சேவை வரியை கண்டித்து பாடாலூரில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
பாடாலூர்,
மத்திய அரசு நாடு முழுவதும் ஒரே மாதிரியான சரக்கு, சேவை வரி என்ற ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அந்த வரிவிதிப்பு வணிகர்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரையும் பாதிக்கும் வகையில் உள்ளதாகவும், எனவே ஜி.எஸ்.டி வரிவிதிப்பை கண்டித்தும், அதனை அமல்படுத்தும் மத்திய அரசை கண்டித்தும் ஆலத்தூர் தாலுகா பாடாலூரில் நேற்று வணிகர்கள் அனைத்துக் கடைகளையும் அடைத்து போராட்டம் நடத்தினர்.
இதனால் பாடாலூர் கடைவீதி பகுதி மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. பொதுமக்கள் அததிவசியப் பொருட்களை கூட வாங்க முடியாமல் மகவும் அவதிப்பட்டனர். பாடாலூரில் உள்ள மளிகைக்கடைகள், ஜவுளிக்கடைகள் உள்ளிட்ட அனைத்துக் கடைகளும் மூடப்பட்டதால் பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
பெரம்பலூரில் பெரும்பாலான கடைகள் திறந்திருந்தன. ஒரு சில கடைகள் மட்டுமே வணிகர்களின் போராட்டத்திற்கு ஆதரவு அளித்து அடைக்கப்பட்டிருந்தன. இதனால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.