காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங் களில் ஆர்ப்பாட்டம் விவசாய சங்க தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் தீர்மானம்
திருச்சி,
முக்கிய அரசியல் கட்சிகளின் விவசாய பிரிவு தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் திருச்சியில் நேற்று நடந்தது. தி.மு.க. விவசாய அணி மாநில செயலாளரும், இயற்கை நீர்வள பாதுகாப்பு இயக்க தலைவருமான கே.பி.ராமலிங்கம் (முன்னாள் எம்.பி) தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
வறட்சியின் காரணமாக தற்கொலை மற்றும் அதிர்ச்சியால் இறந்த அனைத்து விவசாயிகளின் குடும்பங்களுக்கும் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும். வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து பயிர் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்று குழுவை உடனே அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வறட்சி நிவாரண பணிகளுக்காக தமிழகத்துக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். விவசாய இடுபொருட்களுக்கும், வேளாண் கருவிகளுக்கும் சரக்கு, சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
விவசாயத்திற்கு மின் இணைப்பு கோரி காத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் குறிப்பிட்ட கால வரையறைக்குள் மின் இணைப்பு வழங்க வேண்டும். மின் இணைப்புக்கு தட்கல் முறையை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தமிழகம் முழுவதும் அனைத்து ஒன்றிய பகுதிகளிலும் ஜூலை 25–ந் தேதி முதல் ஆகஸ்டு 5–ந் தேதி வரை பிரசார இயக்கமும், மாவட்ட தலைநகரங்களில் ஆகஸ்டு 10–ந் தேதி முதல் 15–ந் தேதி வரை ஆர்ப்பாட்டமும் நடத்துவது.
மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்களை விளக்கி நிருபர்களுக்கு பேட்டி அளித்த கே.பி.ராமலிங்கம் ‘இரண்டு கட்ட போராட்டத்திற்கு பின்னரும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டமும், அதன் பின்னர் மாநில அளவில் முழு அடைப்பு போராட்டமும் நடத்தப்படும். தமிழக விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக பாரதீய ஜனதா, அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசவும் திட்டமிட்டு இருக்கிறோம்’ என்றார்.
கூட்டத்தில் விவசாய பிரிவு தலைவர்கள் பவன்குமார் (காங்கிரஸ்), பாலகிருஷ்ணன் (தமிழ்நாடு விவசாய சங்கம்), அய்யாக்கண்ணு (தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம்), செல்லமுத்து (உழவர் உழைப்பாளர் கட்சி), பி.ஆர்.பாண்டியன் (அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு), விசுவநாதன் (தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம்), சக்திவேல் (இயற்கை நீர்வள பாதுகாப்பு இயக்கம்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.