தொழிற்சாலைகளில் கொத்தடிமைகளாக வேலை செய்த 125 சிறுவர் – சிறுமிகள் மீட்பு, 4 பேர் கைது


தொழிற்சாலைகளில் கொத்தடிமைகளாக வேலை செய்த 125 சிறுவர் – சிறுமிகள் மீட்பு, 4 பேர் கைது
x
தினத்தந்தி 1 July 2017 3:15 AM IST (Updated: 1 July 2017 2:47 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் அருகே, தொழிற்சாலைகளில் கொத்தடிமைகளாக வேலை செய்த 125 சிறுவர்–சிறுமிகள் மீட்பு 4 பேர் கைது

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் உள்ள சில தொழிற்சாலைகளில் வடமாநிலங்களைச் சேர்ந்த 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகள் குழந்தை தொழிலாளர்களாக வேலை பார்த்து வருவதாக புகார்கள் வந்தன.

அதன்பேரில் குழந்தைகள் பாதுகாப்பு நல அதிகாரிகள் எடுத்த அதிரடி நடவடிக்கையின் பேரில் 2 நாட்களுக்கு முன்பு ஒரே நிறுவனத்துக்கு சொந்தமான 2 மீன்வலை தயாரிப்பு தொழிற்சாலைகளில் இருந்து வடமாநில சிறுவர்–சிறுமிகள் மீட்கப்பட்டனர்.

அவர்களிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளில் மேலும் பல சிறுவர்–சிறுமிகள் வேலை செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அதிகாரிகள் நாகர்கோவில் அருகே உள்ள அனந்தநாடார்குடி, நைனாபுதூர் ஆகிய ஊர்களில் செயல்படும் அந்த ஆலைகளில் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள்.

அப்போது, அங்கு கொத்தடிமைகளாக வேலை செய்து வந்த சிறுவர்–சிறுமிகள் பலரை அதிகாரிகள் மீட்டு அழைத்து வந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் ஜார்கண்ட், அசாம் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.

இதுதொடர்பாக சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த தொழிற்சாலைகளின் கண்காணிப்பாளர்கள் 4 பேரை கைது செய்தனர். தொழிற்சாலைகளின் உரிமையாளர் உள்பட மற்ற 3 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

இது தொடர்பாக குமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அதிகாரி குமுதா கூறியதாவது:–

கடந்த 2 நாட்களில் மொத்தம் 125 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இன்று (அதாவது நேற்று) மட்டும் 75 சிறுவர்–சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களின் பெரும்பாலானோர் ஏஜெண்டுகள் மூலம்தான் வேலைக்கு வந்துள்ளனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story