சிறு, குறு வியாபாரிகளுக்கு ஜி.எஸ்.டி. பெரும் சுமையாக இருக்கும்


சிறு, குறு வியாபாரிகளுக்கு ஜி.எஸ்.டி. பெரும் சுமையாக இருக்கும்
x
தினத்தந்தி 2 July 2017 4:30 AM IST (Updated: 2 July 2017 12:02 AM IST)
t-max-icont-min-icon

தற்போது நடைமுறைக்கு வந்துள்ள ஜி.எஸ்.டி. முறை, சிறு, குறு வியாபாரிகளுக்கு பெரும் சுமையாக இருக்கும் என்று ப.சிதம்பரம் தெரிவித்தார்.

காரைக்குடி,

ஜி.எஸ்.டி. கொண்டுவருவதற்காக 2010–ம் ஆண்டு காங்கிரஸ் முயற்சி செய்தது. அப்போது குஜராத், மத்தியபிரதேச மாநிலங்கள் இதற்கு முட்டுக்கட்டை போட்டன. தமிழ்நாடும் அந்த முட்டுக்கட்டையில் சேர்ந்துகொண்டது. இந்த ஜி.எஸ்.டிக்கு முன்னோடியாக விளங்கியது காங்கிரஸ் தான்.

ஆனால் இதை முதல் விரோதிபோல் காங்கிரசை சித்தரிப்பது கண்டனத்துக்கு உரியது. இதற்கு முன்பு இருந்த பா.ஜ.க. தான் இதற்கு முதல் எதிரியாக இருந்தது. தற்போது ஆட்சி மாற்றத்தால் அவர்கள் தங்களது நிலையை மாற்றிக்கொண்டனர். தற்போது அமலுக்கு வந்துள்ளது உண்மையான ஜி.எஸ்.டி. அல்ல.

இதில் பல்வேறு குறைபாடுகள் மற்றும் பிழைகள் உள்ளதால் அவற்றை காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது. மற்ற நாடுகளைவிட ஜி.எஸ்.டி. வரி விதிப்பு 15 சதவீதம் அதிகம் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். தற்போது உள்ள வரிவிதிப்பு முறைகளிலும் நிறைய குளறுபடிகள் உள்ளன.

இதுதவிர வியாபாரிகளை வகைப்படுத்துவதில் நிறைய குளறுபடிகள் உள்ளன. எந்த அரசு எந்த வியாபாரிகளை கண்காணிக்கும் என்று தெரியவில்லை. தற்போது வந்துள்ள ஜி.எஸ்.டி.யில் மின்சாரம், பெட்ரோல்–டீசல், எரிவாயு உள்ளிட்ட 45 சதவீத வர்த்தக பொருட்கள் வரவில்லை. எனவே இதுபோன்ற மோசமான மசோதா எதுவும் இருக்க முடியாது.

இந்த ஜி.எஸ்.டி.யால் போக்குவரத்து, மின்சார கட்டணம், வீடு, லாரி வாடகை அதிகரித்துள்ளது. சந்தை பொருளாதாரத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளனர். இந்த சட்டத்தில் பல மோசமான ‌ஷரத்துகள் உள்ளன. இந்த ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் முதல் விளைவாக பணவீக்கம் ஏற்படும். சிறு குறு, நடுத்தர வியாபாரிகளுக்கு இந்த ஜி.எஸ்.டி பெரிய சுமையாகும். ஜி.எஸ்.டி.யின் விளைவுகள் போகப்போகத்தான் தெரியும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story