கோவளம் கடலில் குளித்தவர்கள் மாயம்
கோவளம் கடலில் குளித்த பல் டாக்டர் மற்றும் 2 என்ஜினீயரிங் மாணவர்கள் ராட்சத அலையில் சிக்கி மாயமானார்கள். அவர்கள் கதி என்ன? என்று தெரியவில்லை.
திருப்போரூர்,
சென்னை திருவொற்றியூரை சேர்ந்தவர் பிருதிவிராஜன் (வயது 35). பல் டாக்டரான இவர் கேளம்பாக்கம் பகுதியில் உள்ள செட்டிநாடு மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். இவர் நேற்று மாலை நண்பர்கள் சிலருடன் காஞ்சீபுரம் மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவளம் கடற்கரைக்கு வந்தார். அங்கு அவர்கள் கடலில் குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு ராட்சத அலையில் பிருதிவிராஜன் சிக்கிக்கொண்டார். அருகில் இருந்தவர்கள் அவரை கரைசேர்க்க முயன்றும் முடியவில்லை. சிறிது நேரத்தில் அவர் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டார்.
அதேபோல சத்தியபாமா என்ஜினீயரிங் கல்லூரியில் 2–ம் ஆண்டு படித்துவரும் மாணவர்கள் 10 பேர் நேற்று மாலை கோவளம் கடற்கரைக்கு வந்தனர். அவர்களும் கடலில் உற்சாகமாக குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு ராட்சத அலை வந்ததும் மாணவர்கள் வேகமாக கரைக்கு திரும்பினார்கள்.
அவர்களில் ஹென்றி ஜோசப் (18), ராகேஷ் (18) என்ற 2 மாணவர்களை மட்டும் காணவில்லை. அவர்கள் அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டது தெரிந்தது. அந்த மாணவர்கள் 2 பேரும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தெரிகிறது.
இந்த சம்பவங்கள் பற்றி கோவளம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அந்த பகுதி மீனவர்கள் உதவியுடன் கடலில் மூழ்கி மாயமானவர்களை தேடி வருகிறார்கள்.