வணிகர்களின் சந்தேகங்களுக்கு தீர்வுகாண மத்திய கலால் அலுவலகத்தில் ‘ஜி.எஸ்.டி.’ சேவை மையம்
வணிகர்களின் சந்தேகங்களுக்கு தீர்வு காண சேலம் மத்திய கலால் அலுவலகத்தில் ‘ஜி.எஸ்.டி.‘ சேவை மையம் அமைக்கப்பட்டது.
சேலம்,
நாடு முழுவதும் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் ‘ஜி.எஸ்.டி‘ என்னும் சரக்கு–சேவை வரி அமல்படுத்தப்பட்டது. இந்த ‘ஜி.எஸ்.டி.‘ வரியை எப்படி கையாள்வது? என்பதில் சிறு, குறு வணிகர்கள் மற்றும் வியாபாரிகள் இடையே இன்னும் குழப்பம் நீடித்து வருகிறது.
எனவே, அந்த குறைகளை தீர்க்கும் வகையிலும், வியாபாரிகளின் சந்தேகங்களுக்கு தீர்வு காணும் வகையிலும் சேலம் அணைமேட்டில் உள்ள மத்திய கலால் அலுவலகத்தில் நேற்று, ‘ஜி.எஸ்.டி சேவை மையம்‘ ஏற்படுத்தப்பட்டது. அதையொட்டி, அந்த சேவை மையத்தில் மத்திய கலால் சேலம் கூடுதல் ஆணையாளர் ஆரோக்கியராஜ் ‘கேக்‘ வெட்டி தொடங்கி வைத்தார். இணை ஆணையாளர் தியாகராஜன், துணை ஆணையாளர் சங்கீதா நேரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி ஆணையாளர்கள் சந்திரமூர்த்தி, நடராஜன், வெங்கடேசன், அஜய்கான், வர்த்தகர்கள் தரப்பில் சிறு, குறு தொழில்கள் சங்க தலைவர் என்ஜினீயர் மாரியப்பன், சேலம் அனைத்து வணிகர் சங்க பொதுச்செயலாளர் ஜெயசீலன் மற்றும் வர்த்தகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
வியாபாரிகள் இடையே உள்ள வரி பற்றிய பயத்தை தகர்த்தெறியத்தான் மத்திய அரசு ‘ஜி.எஸ்.டி.‘ என்னும் சரக்கு மற்றும் சேவை வரியை எளிமையாக அமல்படுத்தி உள்ளது. ‘ஜி.எஸ்.டி.‘ தொடர்பாக கடந்த ஆண்டு (2016) செப்டம்பர் மாதம் முதலே வணிகர்கள், வியாபாரிகள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இதுவரை 50 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி உள்ளோம். வர்த்தகர்கள் வரி செலுத்துவதில் தற்போது உள்ள நிலை இறுதியானது அல்ல. சில மாற்றங்கள் வரக்கூடும். 3 மாதம் முதல் 6 மாதங்கள் வரை சில குழப்பங்கள் இருக்கத்தான் செய்யும். வியாபாரிகளுக்கு வரி செலுத்த குறித்த கால அவகாசம் வழங்கப்படும். தவறு ஏற்பட்டிருந்தால் நாங்கள் ஆய்வின்போது கண்டுபிடித்து விடுவோம்.
சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் 300–க்கும் மேற்பட்டவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. எனவே, ‘ஜி.எஸ்.டி.‘ பற்றிய சந்தேகங்களை மத்திய கலால் மைய அலுவலகம் மற்றும் கிளை அலுவலகங்களிலும் உள்ள சேவை மையங்களுக்கு சென்று தெரிந்து கொள்ளலாம். வரி செலுத்துவோரின் உற்ற நண்பனாக இந்த சேவை மையம் செயல்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
வணிகர்கள் தரப்பில் பேசுகையில், ‘‘ஜி.எஸ்.டி.யை ஒரு தரப்பினர் வரவேற்றாலும், ஒரு தரப்பினர் அதை எப்படி கையாள்வது என்பது தெரியாமல் அச்சத்தில் உள்ளனர். ஆன்லைனில் கணக்குகளை எப்படி கையாள்வது என்பதும் தெரியவில்லை.
எனவே, வர்த்தகர்கள் இடையே உள்ள பயம், குழப்பத்தை போக்க அதிகாரிகள் விரிவான விளக்கம் அளிக்க வேண்டும். தவறுகள் ஏற்பட்டாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்க கூடாது. அதை சரிசெய்திட கால அவகாசம் வழங்க வேண்டும்‘‘ என்றனர்.