குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல் 2 அரசு பஸ்கள் சிறைபிடிப்பு


குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல் 2 அரசு பஸ்கள் சிறைபிடிப்பு
x
தினத்தந்தி 2 July 2017 4:30 AM IST (Updated: 2 July 2017 2:40 AM IST)
t-max-icont-min-icon

சுசீந்திரம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த 2 அரசு பஸ்கள் சிறைபிடிக்கப்பட்டன. 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலகிருஷ்ணன்புதூர்,

சுசீந்திரம் அருகே ராமபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட கிராமம் கோழிகோட்டுபொத்தை.  இந்த பகுதிக்கு குடிநீர் வழங்குவதற்காக தேவகுளத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களாக கோழிக்கோட்டுபொத்தை பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை எனத்தெரிகிறது. இதனால், அந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்தில் புகார் கூறினர்.

அப்போது, தேவகுளத்தில் உள்ள ஆழ்குழாய் கிணறு மற்றும் பம்பு செட்டை யாரோ மர்ம நபர்கள் சேதப்படுத்தி உள்ளதாகவும், இதுதொடர்பாக செயல் அலுவலர் டேனியல் சுசீந்திரம் போலீசில் புகார் கொடுத்துள்ளதாகவும் கூறப்பட்டது.    

சாலை மறியல்

இந்தநிலையில், நேற்று காலை 10.30 மணியளவில் கோழிகோட்டுபொத்தை சந்திப்பில் பொதுமக்கள் காலி குடங்களுடன் குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில், ஊராட்சி முன்னாள் தலைவர் பாஸ்கரன் தலைமையில், ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது, அந்த வழியாக வந்த 2 அரசு பஸ்கள் உள்பட பல வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டன. இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாம்சன்  மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Related Tags :
Next Story