நில அளவை துறையை தொழில்நுட்ப துறையாக அறிவிக்க வேண்டும்


நில அளவை துறையை தொழில்நுட்ப துறையாக அறிவிக்க வேண்டும்
x
தினத்தந்தி 3 July 2017 4:00 AM IST (Updated: 3 July 2017 12:18 AM IST)
t-max-icont-min-icon

நில அளவை துறையை தொழில்நுட்ப துறையாக அறிவித்து தனித்துறை ஏற்படுத்த வேண்டும் என்று சிவகங்கையில் நடைபெற்ற நில அளவை அலுவலர்கள் மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சிவகங்கை,

தமிழ்நாடு நில அளவை துறை அலுவலர்கள் ஒன்றிப்பின் சிவகங்கை மாவட்ட மாநாடு நடைபெற்றது. சிவகங்கையில் நடைபெற்ற மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார் வரவேற்று பேசினார். மாநாட்டில் கலந்து கொண்ட தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேசும்போது, இந்த மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட கோரிக்கைகளை முதல்–அமைச்சருக்கு தெரிவித்து நிறைவேற்றி தர நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டில் சட்டம்–ஒழுங்கு பிரச்சினையை காக்க அடித்தளமாக இருப்பது நில அளவை துறையே. இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் நில அளவை துறை நவீன தொழில்நுட்பத்துடன் துல்லியமாக செயல்படுகிறது. நாட்டின் எல்லைகோட்டில் இருந்து வீட்டின் கல்லைகோடு வரை துல்லியமாக தெரிவிப்பது நில அளவை துறையே. அத்துடன் வருவாய்த்துறையின் கண் போன்றது என்றார்.

இந்த மாநாட்டில் சிவகங்கை எம்.பி. செந்தில்நாதன், மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோ, சிவகங்கை கோட்டாட்சியர் சுந்தரமூர்த்தி, தாசில்தார் நாகநாதன், நில அளவை துறை மதுரை மண்டல இணை இயக்குனர் குழந்தைவேலு, மாநில நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநில தலைவர் குமாரவேல் மாநாட்டு நிறைவுரையாற்றினர்.

மாநாட்டில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 7–வது ஊதியக்குழுவில் மாற்றங்களை கொண்டுவர வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும். களப்பணியாளர்களுக்கு நீதி நிர்வாக பயிற்சி அளிக்க வேண்டும். துணை ஆய்வாளர் மற்றும் ஆய்வாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். பொதுமக்கள் விரைவில் பட்டா பெறவும், பராமரிப்பு களப்பணியாளர்களின் வேலைப்பளு குறையவும், கணினி பதிவுகளை சரியான முறையில் பராமரிக்க ஆய்வாளர் தலைமையில் பட்டா திட்டப்பணி அமைப்பை ஏற்படுத்த வேண்டும். நில அளவை துறையை தொழில்நுட்ப துறையாக அறிவித்து தனித்துறை ஏற்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story