மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கக்கோரி தொடர் போராட்டம் நடத்த முடிவு
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கோரி தோப்பூர் நான்கு வழிச்சாலையில் தொடர் போராட்டம் நடத்தப்போவதாக எய்ம்ஸ் மருத்துவமனைக்கான மக்கள் இயக்கம் கூறியுள்ளது.
மதுரை,
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கோரி தோப்பூர் நான்கு வழிச்சாலையில் தொடர் போராட்டம் நடத்தப்போவதாக எய்ம்ஸ் மருத்துவமனைக்கான மக்கள் இயக்கம் கூறியுள்ளது. இதுகுறித்து, அந்த இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மணிமாறன் கூறியதாவது:– தென் மாவட்ட மக்கள் பயன் அடையும் வகையில் எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில் அமைக்க வேண்டும். இதை எங்கள் இயக்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என அறிவிப்பு வெளியிடாதது, தென்மாவட்ட மக்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு, மதுரையை பரிந்துரைக்காத பட்சத்தில் அடுத்த மாதம் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஒதுக்கப்பட்ட இடத்தின் அருகில் உள்ள தோப்பூர் நான்கு வழிச்சாலையில் பொதுமக்களை ஒன்று திரட்டி தொடர் போராட்டம் நடத்தப்படும். அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். மதுரை வந்த மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமையும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவருக்கு தென் மாவட்ட மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.