உப்பனாற்றில் இணைப்புச்சாலை அமைக்கும் பணி தாமதம் போக்குவரத்து மாற்றத்தால் பயணிகள் அவதி


உப்பனாற்றில் இணைப்புச்சாலை அமைக்கும் பணி தாமதம் போக்குவரத்து மாற்றத்தால் பயணிகள் அவதி
x
தினத்தந்தி 3 July 2017 4:30 AM IST (Updated: 3 July 2017 2:51 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழி அருகே சூரக்காடு உப்பனாற்றில் இணைப்புச்சாலை அமைக்கும் பணி தாமதமாக நடைபெற்று வருகிறது. போக்குவரத்து மாற்றத்தால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.

திருவெண்காடு,

நாகை மாவட்டம், சீர்காழியில் இருந்து 2 கி.மீட்டர் தூரத்தில் சூரக்காடு பகுதியில் உப்பனாற்றின் குறுக்கே ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட மிக பழமை வாய்ந்த பாலம் உள்ளது. இந்த பிரதான பாலத்தின் வழியாக சென்னை, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், சீர்காழி மார்க்கத்தில் இருந்து வரும் பஸ்கள் இந்த பாலத்தை கடந்துதான் பூம்புகார், திருவெண்காடு, திருக்கடையூர், காரைக்கால், நாகை, வேளாங்கண்ணி போன்ற ஊர்களுக்கு சென்று வந்தன.

இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் சூரக்காடு பாலத்தின் நடுவே ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அரசு பஸ் ஒன்று சிக்கியது. இதனால் பிரதான வழிதடம் மூடப்பட்டது. இதனால் சென்னை- நாகை தேசிய நெடுஞ்சாலையின் வழிதடம் மாற்றி விடப்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள், அரசு ஊழியர்கள், மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். பின்னர் பாலத்தில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை ரூ.7 லட்சம் செலவில் சீரமைத்து ஒரு மாதத்திற்கு பிறகு கனரக வாகனங்கள் தவிர மற்ற வாகனங்கள் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்டது. ஆனால் பொதுமக்கள் சூரக்காடு உப்பனாற்றின் குறுக்கே புதிய பாலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இணைப்புச்சாலை

இதனையடுத்து தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் பழைய பாலத்தின் அருகில் 61.84 மீட்டர் நீளம், 15 மீட்டர் அகலத்தில் ரூ.8 கோடியே 85 லட்சத்தில் புதிய பாலம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி 26-ந் தேதி பணிகள் தொடங்கப்பட்டன. இந்த பணிகள் ஒரு ஆண்டிற்குள் முடிக்கப்படும் என்று அப்போதைய நாகை மாவட்ட கலெக்டர் பழனிசாமி தெரிவித்தார். ஆனால் இதுவரை பணிகள் முடியவில்லை. இதனிடையே பாலத்திற்கு இணைப்புச்சாலை அமைப்பதாக கூறி மேற்கண்ட வழித்தடத்தில் கடந்த மாதம் 17-ந் தேதியில் இருந்து சென்னை-நாகை இடையேயான பிரதான சாலையில் திடீரென போக்குவரத்து நிறுத்தப்பட்டது. முன்அறிவிப்பு இன்றி பிரதான சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் பெரும் சிரமத்துக்குள்ளானதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். தற்போதுவரை மாற்று வழியிலேயே வாகனங்கள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

நடவடிக்கை

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், இணைப்புச்சாலை அமைக்கும் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் மேலும் 15 நாட்களுக்கு பிரதான வழிதடம் திறக்க வாய்ப்பில்லை என்று தெரிகிறது. தற்போது மாற்று வழிதடத்தில் பஸ்கள் இயக்கப்படுவதால் வழக்கத்தைவிட ரூ.10 முதல் ரூ.20 வரை கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகின்றன. கூடுதல் கட்டணத்தையும் செலுத்தியும் 50 கி.மீட்டர் வரை சுற்றி செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் காலவிரையம் ஏற்பட்டு அவதிக்குள்ளாக வேண்டி உள்ளது. எனவே, இணைப்புச்சாலை அமைக் கும் பணியை விரைந்து முடித்து வழக்கம்போல் சென்னை-நாகை இடையேயான சாலையில் பஸ் உள்ளிட்ட வாகனங்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story