உளுந்தூர்பேட்டையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகள் அகற்றம்


உளுந்தூர்பேட்டையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகள் அகற்றம்
x
தினத்தந்தி 4 July 2017 3:15 AM IST (Updated: 3 July 2017 10:40 PM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை அருகே ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகளை அதிகாரிகள் அகற்றினர்.

உளுந்தூர்பேட்டை,

விழுப்புரம் மாவட்டத்தில் முக்கிய நகரமாக விளங்கி வருகிறது உளுந்தூர்பேட்டை. சென்னையில் இருந்து திருச்சி மற்றும் சேலம் செல்பவர்கள் உளுந்தூர்பேட்டை நகருக்கு வந்து தான் செல்லவேண்டும். இதனால் உளுந்தூர்பேட்டை நகரமானது எப்போதும் பரபரப்புடன் காணப்படும். பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால், உளுந்தூர்பேட்டை நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதியடைந்து வந்தனர்.

இந்த நிலையில் சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளையும் விரிவுபடுத்த வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகத்துக்கு மனு அளித்தனர்.

இதற்கிடையே நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கவிதா, உதவி பொறியாளர் மணிமொழி ஆகியோர் உளுந்தூர்பேட்டை–சென்னை, உளுந்தூர்பேட்டை–திருச்சி, உளுந்தூர்பேட்டை–திருவெண்ணெய்நல்லூர், உளுந்தூர்பேட்டை–விருத்தாசலம் ஆகிய சாலைகள் தற்போது 2 வழிச்சாலையாக உள்ளது. இதை நான்கு வழிச்சாலையை மாற்றுவதற்கு ஆக்கிரமிப்பாளர்கள் கடைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை 3–ந்தேதிக்குள்(அதாவது நேற்று) அகற்றிக்கொள்ளவேண்டும் என்று கூறியிருந்தனர்.

அதன்படி நேற்று முன்தினம் சில கடைகளின் உரிமையாளர்கள் ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்றிக்கொண்டனர். ஒரு சில கடைகள் அகற்றப்படாமல் இருந்தது.

இதையடுத்து நேற்று காலையில் உளுந்தூர்பேட்டை–திருச்சி சாலையில் இருந்து பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கியது. ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகள் மற்றும் கடைகளின் கூரைகளை பொக்லைன் எந்திரம் மூலம் அதிகாரிகள் அகற்றினர்.

அப்போது ஒரு சில இடங்களில் ஆக்கிரமிப்பு செய்தவர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் அவர்களை எச்சரித்தனர். இதையடுத்து ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அப்போது தாசில்தார் பாலசுப்பிரமணியன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர். மேலும் ஆக்கிரமிப்பின் போது அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் இருக்க உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் சாகுல்அமீது தலைமையில் 100–க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Next Story