தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்தி பா.ஜ.க. காலூன்ற நினைக்கிறது: கி.வீரமணி பேச்சு
தமிழகத்தில் சாதி, மத கலவரத்தை ஏற்படுத்தி பா.ஜ.க. காலூன்ற நினைக்கிறது என்று காரைக்குடியில் நடைபெற்ற விழாவில் தி.க. தலைவர் கி.வீரமணி கூறினார்.
காரைக்குடி,
திராவிட கழகம் சார்பில் தென் மாவட்டங்களுக்கான பெரியாரியல் பயிற்சி முகாம் காரைக்குடியில் நடைபெற்றது. இந்த முகாமில் 80 மாணவ–மாணவிகள், இளைஞர்கள் கலந்துகொண்டனர். பயிற்சி முகாம் நிறைவு விழாவிற்கு தி.க. தலைமை செயற்குழு உறுப்பினர் சாமி.திராவிடமணி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் அரங்கசாமி முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் என்னாரஸ் பிராட்லா வரவேற்று பேசினார். தி.க. பொதுச் செயலாளர் சந்திரசேகரன், மாநில துணைத்தலைவர் பூங்குன்றன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் கழக தலைவர் கி.வீரமணி கலந்துகொண்டு, பயிற்சி பெற்ற மாணவர்கள், இளைஞர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
விழாவின்போது கி.வீரமணி தனது சிறப்புரையில் கூறியதாவது:–
ஒற்றை கட்சி, ஒற்றை ஆட்சி அமைப்பது தான் ஆர்.எஸ்.எஸ். நோக்கம். அந்த அடிப்படையில் ஒற்றை வரியையும் கொண்டு வந்துள்ளனர். நோக்கம் சிறந்ததாக இருந்தாலும், இதைப்பற்றி தெளிவுபடுத்த உரிய அவகாசம் தேவை. இதனுடைய விளைவுகள் வெற்றி தருமா என்பது கேள்விக்குறியே. தமிழகத்தில் ஆட்களே இல்லாத கட்சியாக, மிஸ்டுகால் கொடுக்கும் கட்சியாக இருந்து கொண்டு கழகங்கள் இல்லாத தமிழகம் என்று பா.ஜ.க. சொல்லக்கூடாது. குடியரசு தலைவர் தேர்தலில் கழகங்களின் ஓட்டு தேவையென்று தேடி வருகிறார்கள். இதற்கு மட்டும் கழகங்கள் தேவையா.
பசுவுக்கு கொடுக்கும் பாதுகாப்பு மனிதர்களுக்கு இல்லை. கடும் எதிர்ப்புக்கு பிறகு வேறு வழியில்லாமல் பிரதமர் மோடியே ஒப்புக்காக கண்டித்துள்ளார். பசுவின் மூலம் ஏராளமான கலவரம் நடக்கிறது என்று மோடியே ஒப்புதல் வாக்குமூலம் தந்திருக்கிறார். சாதி, மத கலவரத்தை ஏற்படுத்தி தமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற முயற்சிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.