குமரகிரி ஊராட்சி பகுதியில் சீராக குடிநீர் வழங்க கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு


குமரகிரி ஊராட்சி பகுதியில் சீராக குடிநீர் வழங்க கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 4 July 2017 4:15 AM IST (Updated: 4 July 2017 2:22 AM IST)
t-max-icont-min-icon

குமரகிரி ஊராட்சி பகுதியில் சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். அப்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தூத்துக்குடி ஒன்றிய குழு செயலாளர் சங்கரன் மற்றும் குமரகிரி ஊராட்சி இந்திராநகரை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் செய்து, பின்னர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், தூத்துக்குடி ஒன்றியம் குமரகிரி ஊராட்சி இந்திராநகர் பகுதியில் சுமார் 500–க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு பல நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் குடிநீரை காசு கொடுத்து வாங்கும் சூழ்நிலையில் உள்ளனர். இந்த பகுதி மக்களின் நலன் கருதி, குடிநீர் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.


தூத்துக்குடி ஒன்றியம் குமரகிரி ஊராட்சிக்கு உட்பட்ட சூசைபாண்டியாபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் ஊரில் ஊராட்சி மூலம் ஆழ்துளை கிணறு அமைத்து, அதன்மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சியால் 4 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் எங்கள் பகுதியில் சில நபர்கள் ஆழ்துளை கிணறுகள் அமைத்து அதில் இருந்து தண்ணீரை உறிஞ்சி விற்பனை செய்து வருகின்றனர். இதனால் எங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. மேலும் தண்ணீர் ஏற்றி செல்லும் லாரிகளால் விபத்துகள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன. எனவே பொதுமக்கள் நலன் கருதி எங்கள் பகுதிக்கு சீராக குடிநீர் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.


தூத்துக்குடி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் மச்சேந்திரன் கொடுத்த மனுவில், சிவத்தையாபுரம்– சுப்பிரமணியபுரம் நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தாசில்தார் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும். பின்னர் மாவட்ட நிலஅளவையர் மூலம் நில அளவை செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கூறி இருந்தார்.

தூத்துக்குடி மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் ரமேஷ் கொடுத்த மனுவில், தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் அரசின் அனைத்து நகர பஸ்களையும், பொதுமக்கள், பள்ளி மாணவ–மாணவிகள், குழந்தைகள் அச்சமின்றி பயன்படுத்திடும் வகையில், அவற்றை சீரமைத்து அரசு விதிமுறைப்படி இயக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.


Next Story