குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்


குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 5 July 2017 4:15 AM IST (Updated: 5 July 2017 1:40 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

க.பரமத்தி,

க.பரமத்தி ஒன்றியம், ராஜபுரம் ஊராட்சியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களின் குடிநீர் தேவைக்காக அப்பகுதியில் 2 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டு 2 ஆழ்குழாய் கிணறுகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 ஆழ்குழாய் கிணற்றிலும் பொருத்தப்பட்டிருந்த மின் மோட்டார்கள் பழுதடைந்தன. இதனால் அப்பகுதியில் குடிநீர் வினியோகம் செய்ய முடியவில்லை. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் க.பரமத்தி ஒன்றிய அலுவலகத்திலும், மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் கோரிக்கை மனு கொடுத்தனர். ஆனால் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் ராஜபுரத்தில் நேற்று காலை குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் அரவக்குறிச்சி- சின்னதாராபுரம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அரவக்குறிச்சி துணை தாசில்தார் செந்தில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தேன்மொழி, சின்னதாராபுரம் வருவாய் ஆய்வாளர் ஜெகன்மணி, கிராம நிர்வாக அலுவலர் வேலுச்சாமி, சின்னதாராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருத்திகா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அதிகாரிகள் கூறுகையில், விரைவில் பழுதடைந்த மின் மோட்டார்களை அகற்றிவிட்டு அதற்கு பதில் புதிய மின் மோட்டார்களை பொருத்தி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அரவக்குறிச்சி- சின்னதாராபுரம் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Related Tags :
Next Story