சாலையோரத்தில் அமர்ந்து பா.ஜனதாவுக்கு உறுப்பினர்களை சேர்த்த பொன்.ராதாகிருஷ்ணன்


சாலையோரத்தில் அமர்ந்து பா.ஜனதாவுக்கு உறுப்பினர்களை சேர்த்த பொன்.ராதாகிருஷ்ணன்
x
தினத்தந்தி 5 July 2017 4:45 AM IST (Updated: 5 July 2017 1:45 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில், சாலையோர கடையின் படியில் அமர்ந்திருந்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பா.ஜனதாவுக்கு உறுப்பினர்களை சேர்த்தார்.

நாகர்கோவில்,

மத்திய பா.ஜனதா அரசின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்யும் நிகழ்ச்சி நாகர்கோவில் கோட்டார் பெரியவிளை பகுதியில் நேற்று நடந்தது.

நிகழ்ச்சியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்று வீடு- வீடாக சென்று சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை வினியோகித்தார். அப்போது அவர் பா.ஜனதா கொடியை கையில் பிடித்துக் கொண்டே சென்றார்.

அதைத் தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாடு முழுவதும் பா.ஜனதாவில் எல்லா பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும், முழு நேர ஊழியராக வரவேண்டும். தீனதயாள் உபாத்யாய போல் நாமும் ஈடுபட வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம். முழு நேர ஊழியர்களாக பணியாற்ற 15 லட்சத்துக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.


தமிழகத்தில் மட்டும் 11 ஆயிரம் பேர் சம்மதம் தெரிவித்துள்ளனர். இவர்கள் 900 பேர் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். அனைவரும் அவர்களது பகுதியில் வீடு- வீடாக சென்று பா.ஜனதா அரசின் சாதனைகளை சொல்லுவார்கள். பா.ஜனதாவுக்கு ஆதரவு கேட்பது, கிளை இல்லாத பகுதியில் கிளை அமைப்பது உள்ளிட்ட பணிகளையும் அவர்கள் செய்வார்கள்.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தமிழகத்தில் பா.ஜனதா மாபெரும் சக்தியாக உருவாகும். இந்த ஆண்டின் இறுதிக்குள் முதன்மை கட்சியாக பா.ஜனதா வரவேண்டும் என்பதற்காக பணியாற்றி வருகிறோம். பிற கட்சி தொண்டர்களை விட பா.ஜனதா தொண்டர்கள் தீவிரமாக செயல்படுகிறார்கள்.


ஜி.எஸ்.டி. உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் மத்திய அரசை மையப்படுத்தி தமிழகத்தில் போராட்டங்கள் நடக்கிறது. ஆனால் இது ஒரு பிரச்சினையே அல்ல. சில பேர் சில நாட்கள் அல்லது சில மாதங்கள்தான் பொய் சொல்ல முடியும். திராவிட கட்சிகள் பொய் சொல்லி தமிழகத்தில் ஆதாயம் தேடிய காலம் முடிவடைந்து விட்டது. இனி பா.ஜனதாவின் காலம்.

இவ்வாறு அவர் கூறினார்.


முன்னதாக அந்த பகுதியில் பா.ஜனதா உறுப்பினர் சேர்க்கை நடந்தது. அதில் பங்கேற்ற மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சாலையின் ஓரம் இருந்த ஒரு கடையின் வாசல் படியில் அமர்ந்தார். அங்கிருந்தபடியே உறுப்பினர் சேர்க்கை படிவத்தில் விவரங்களை பதிவு செய்தார். இதை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்துச் சென்றனர். அதைத் தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் வீடு- வீடாக வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட செயலாளர் ஜெகநாதன், முன்னாள் மாவட்ட தலைவர் தர்மபுரம் கணேசன், முன்னாள் நகர தலைவர் ராகவன், முன்னாள் கவுன்சிலர் ரமேஷ் மற்றும் முருகேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story