தாளவாடி அருகே பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பள்ளி செல்லும் மாணவர்கள்
தாளவாடி அருகே பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பள்ளி செல்லும் மாணவர்கள் கூடுதலாக பஸ்கள் இயக்க மலைக்கிராம மக்கள் கோரிக்கை
தாளவாடி,
தாளவாடி அருகே உள்ள மல்லன்குழி கிராமத்தில் அரசின் மாதிரி பள்ளி கட்டப்பட்டு இந்த ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் தாளவாடி, தொட்டகாஜனூர், மெட்டல்வாடி, அருள்வாடி, பீம்ராஜ்நகர், சொத்தன்புரம் ஆகிய கிராமங்களில் இருந்து சுமார் 80 மாணவ–மாணவிகள் சேர்ந்து படித்து வருகிறார்கள். இவர்கள் பள்ளிக்கு செல்வதற்கு வசதியாக தாளவாடியில் இருந்து தினமும் காலை 8.30 மணிக்கு ஒரு அரசு பஸ் இயக்கப்படுகிறது.
இதே பஸ்சில் தான் சூசைபுரம் பள்ளி, பனக்கள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சுமார் 200–க்கும் மேற்பட்டவர்களும் செல்ல வேண்டும். இந்த பஸ்சை விட்டால் வேறு பஸ்கள் கிடையாது. இந்த பஸ்சில் சென்றால் தான் வகுப்புக்கு 10.30 மணிக்கு சேர முடியும். எனவே ஒரே பஸ்சில் ஒரே நேரத்தில் மாணவ–மாணவிகள் 200–க்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனால் பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. பஸ்சின் உள்ளே நிற்க கூட இடம் இல்லாமல் படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணம் செய்கிறார்கள். அதனால் விபத்தும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு பள்ளி செல்லும் மாணவர்களின் நலன் கருதி மல்லன்குழி கிராமத்துக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதலாக பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலைக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.