சேலையூர் அருகே என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
சேலையூர் அருகே என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக அவர் எழுதிய கடிதம் சிக்கியது.
தாம்பரம்,
சென்னையை அடுத்த சேலையூர் அருகே உள்ள தேனு விநாயகர் நகரைச் சேர்ந்தவர் பாலு. இவருடைய மகன் ஹேமச்சந்திரன் (வயது 20). இவர், சந்தோசபுரம் பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 4–ம் ஆண்டு மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து வந்தார்.
அண்ணா பல்கலைக்கழக தேர்வு எழுத கல்லூரியில் போதிய வருகை பதிவு இல்லாததால் ஹேமச்சந்திரனை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதில் மனம் உடைந்த மாணவர் ஹேமச்சந்திரன், நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர், தூக்கில் தொங்கிய அவரை மீட்டு குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மாணவர் ஹேமச்சந்திரன் பரிதாபமாக இறந்து விட்டார்.
ஹேமச்சந்திரன் தற்கொலை செய்வதற்கு முன்பு தனது நோட்டில் கடிதம் எழுதி வைத்து இருந்தார். அதில் அவர், தன் சாவுக்கு கல்லூரி மெக்கானிக்கல் துறை தலைவரே காரணம் என எழுதி இருந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து ஹேமச்சந்திரனின் தந்தை பாலு, சேலையூர் போலீசில் புகார் செய்தார். அதில் அவர், தன் மகனின் சாவுக்கு காரணமான கல்லூரி பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார். இது தொடர்பாக சேலையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.