சிறுபான்மையின மாணவர்கள் உதவித் தொகை பெற சிறப்பு முகாம்
திருவண்ணாமலை கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற சிறப்பு முகாம் வருகிற 13–ந்தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது.
இதுகுறித்து கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
தமிழகத்தில் சிறுபான்மையினர்களாக கருதப்படும் முஸ்லிம், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், பார்சிகள் மற்றும் ஜெயின் மதங்களை சேர்ந்தவர்கள் பொருளாதாரத்தில் மேம்பாடு அடையும் வகையில் வியாபாரம் மற்றும் தொழில்கள் செய்வதற்கு பல்வேறு கடன் உதவித் திட்டங்கள் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாம்கோ) மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் கடன் பெற தகுதியானோருக்கு சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இதில் தனிநபர் கடன் திட்டம், வியாபாரம், தொழில் தொடங்கிடவும், ஏற்கனவே செய்து வரும் தொழிலை அபிவிருத்தி செய்வதற்கும் கூட்டுறவு சங்கங்களின் மூலம் கடன் அளிக்கப்படுகிறது.மேலும் சில்லரை வியாபாரம், மரபு வழிச் சார்ந்த வாகனக்கடன், விவசாயம் தொடர்பான தொழில்கள் செய்ய கடன் என பல்வேறு கடன் உதவி வழங்கப்படுகிறது.
இவை தவிர மாணவர்களுக்கு கல்விக்கடன், கறவை மாடு கடன் உதவி, ஆட்டோ கடன், சிறுகடன் என பல்வேறு நிலைகளில் கடனுதவி வழங்கப்படுகிறது.சிறுபான்மையின வகுப்பை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை, தொழிற்கல்வி, தொழிற்நுட்பக்கல்வி மற்றும் குறுகிய கால உயர் திறன் வளர்ச்சி படிப்பு படிப்பவர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கல்வி கடன் வழங்கும் திட்டம் டாம்கோ மூலம் செயல்படுத்தப்படுகிறது.
கல்வி கடனுதவி திட்டங்கள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நிதி கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மூலம் செயல்படுத்தப்படுகிறது.
கல்வி கடன் பெற்ற மாணவ, மாணவிகள் ஒவ்வொரு ஆண்டும் கல்விக் கடன் புதுப்பிக்க ஆண்டு தேர்வுகளில் தேர்ச்சி பெற்றதற்கான மதிப்பெண் சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட வங்கிகளில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த திட்டங்கள் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் பெறவும், பயனாளிகள் விண்ணப்பிக்கவும் வருகிற 13–ந் தேதி (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.கடன் தேவைப்படும் சிறுபான்மையினர் சமுதாயத்தை சார்ந்த நபர்கள் தங்களது சாதிச் சான்று, பள்ளி மாற்றுச் சான்று, வருமான சான்று, குடும்ப அட்டை, இருப்பிட சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை, ஓட்டுனர் உரிமம் நகல், ஆதார் அட்டை மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்களுடன் நேரில் பங்கேற்க வேண்டும். தகுதியான மனுக்கள் மீது கடன் வழங்க வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.