வாசுதேவநல்லூர் அர்த்தநாரீசுவரர் கோவிலில் இன்று ஆனித்திருவிழா தேரோட்டம்
வாசுதேவநல்லூரில் அர்த்தநாரீசுவரர் கோவிலில் ஆனித்திருவிழா தேரோட்டம் இன்று நடக்கிறது.
வாசுதேவநல்லூர்,
வாசுதேவநல்லூரில் அர்த்தநாரீசுவரர் கோவிலில் ஆனித்திருவிழா தேரோட்டம் இன்று நடக்கிறது.
அர்த்தநாரீசுவரர் கோவில்நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூரில் பிரசித்தி பெற்ற அர்த்தநாரீசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனித்திருவிழா சிறப்பாக நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டுக்கான ஆனித்திருவிழா கடந்த 29–ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், வீதி உலாவும் நடக்கிறது. 7–ம் திருநாளான நேற்று முன்தினம் சுவாமி– அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. மாலை 4 மணிக்கு சிவப்பு சாத்தி கூத்தப்பெருமான் வீதி உலாவும், மாலை 5 மணிக்கு சுவாமி கனக பல்லக்கில் வீதி உலாவும் நடந்தது. இரவு 11 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பூம்பல்லக்கு சப்பரத்தில் சுவாமி வீதிஉலா நடந்தது.
தேரோட்டம்தொடர்ந்து 8–ம் திருநாளான நேற்று மாலை 4 மணிக்கு கங்காள நாதர் சுவாமி வீதி உலா நடந்தது. இரவு 11 மணிக்கு கைலாச பருவத்தில் சுவாமி உலாவும், குதிரை வாகனத்தில் சந்திரசேகர் சுவாமி தேர் பார்வையிடலும் நடந்தது. 9–ம் திருநாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு அம்மையப்பன் தேரில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது.
தொடர்ந்து விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆனித்திருவிழா தேரோட்டம் மண்டகபடிதாரரான வாசுதேவநல்லூர் தொழில் அதிபர் எஸ்.தங்கப்பழம் நாடார் குடும்பத்தினரால் தேர் அலங்காரம் செய்யப்பட்டு மதியம் 1 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இரவு 10 மணிக்கு கோவில் சார்பில், அம்மையப்பன் தேர்த்தடம் பார்க்க வெட்டும் குதிரையில் வீதி உலா நடைபெறும்.
தீர்த்தவாரி10–ம் திருநாளான நாளை (சனிக்கிழமை) தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. காலை 9 மணிக்கு தீர்த்தவாரி கனகபல்லக்கில் அம்மையப்பன் வீதிஉலாவும், மாலை 4 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனத்தில் அம்மையப்பன் மண்டகப்படியில் இருந்து வீதிஉலா நடைபெறும். தொடர்ந்து இரவு 9 மணிக்கு தெப்பத்திருவிழா நடைபெறும். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.