பாம்பனில் புதிய தூக்குப்பாலம் பணிகள் 3 மாதத்தில் தொடங்கும்


பாம்பனில் புதிய தூக்குப்பாலம் பணிகள் 3 மாதத்தில் தொடங்கும்
x
தினத்தந்தி 7 July 2017 4:30 AM IST (Updated: 7 July 2017 2:48 AM IST)
t-max-icont-min-icon

பாம்பன் ரெயில் பாலத்தில் ரூ.32 கோடியில் புதிய தூக்குப்பாலம் பணிகள் 3 மாதத்தில் தொடங்கும் என்று தெற்கு ரெயில்வே தலைமை பொறியாளர் தெரிவித்துள்ளார்.

ராமேசுவரம்,

ராமேசுவரம் அருகே உள்ள பாம்பன் ரெயில் பாலத்தை ஆய்வு செய்ய நேற்று தெற்கு ரெயில்வேயின் தலைமை பொறியாளர் ரவீந்திரபாபு பாம்பனுக்கு வந்தார். பின்னர் பாம்பன் ரெயில்வே நிலையத்தில் இருந்து மோட்டார் டிராலி மூலம் பாம்பன் ரெயில் தூக்குப்பாலத்துக்கு சென்றார். அங்கு, அவர் முழுமையாக ஆய்வு செய்து மைய பகுதியில் உள்ள 2 இணைப்புகளையும் மற்றும் மேல் பகுதிக்கும் சென்று பார்வையிட்டார். அதன்பின் தூக்குப்பாலம் வழியாக திருச்சி,மதுரை பயணிகள் ரெயில் கடந்து சென்றபோது தூக்குப்பாலத்தில் அதிர்வுத் தன்மையை ஆய்வு செய்தார். தொடர்ந்து தூக்குப்பாலம் திறந்து மூடப்பட்டது.

பிறகு தலைமை பொறியாளர் ரவீந்திரபாபு நிருபர்களிடம் கூறியதாவது:- தெற்கு ரெயில்வேயின் பாலங்களின் தலைமை பொறியாளராக கடந்த மாதம் பொறுப்பேற்றேன். பாம்பன் ரெயில் பாலம் மற்றும் தூக்குப் பாலத்தை ஆய்வு செய்ய வந்துள்ளேன். 100 ஆண்டுகளை கடந்து கடலில் உள்ள ரெயில் பாலத்தின் மைய பகுதியில் உள்ள தூக்குப் பாலத்தை அகற்றிவிட்டு ரூ.32 கோடி மதிப்பில் மின் மோட்டார் மூலம் திறந்து மூடும் வகையில் புதிய தூக்குப் பாலம் அமைக்கப்பட உள்ளது.


புதிய தூக்குப்பாலம் ஒரே இணைப்பில் மேல் நோக்கி திறந்து மூடும் வகையில் ரெயில்வே துறையின் மூலம் வடிவமைத்து அமைக்கப்பட உள்ளது. புதிய தூக்குப்பாலம் கட்டுவதற்கான டெண்டரும் விடப்பட்டுள்ளது. 3 மாதத்தில் புதிய தூக்குப் பாலத்தின் பணிகள் தொடங்க திட்டமிடப்பட்டுஉள்ளது. வருகிற 2018-ம் ஆண்டு இறுதிக்குள் பாம்பன் ரெயில் பாலத்தின் மைய பகுதியில் புதிய தூக்குப்பாலம் அமைக்கப்பட்டுவிடும்.தூக்குப் பாலத்திற்கான முன்னேற்பாடு பணிகள் அனைத்தும் பாம்பன் ரெயில் நிலையத்தில் வைத்து தான் நடைபெறும். புதிய தூக்குப்பாலத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெறும்போது ரெயில்கள் நிறுத்தப்படுவது குறித்து அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Related Tags :
Next Story