பெற்றோரை இழந்த பேரன்-பேத்திகளை பராமரிக்க முடியாமல் தவிக்கும் மூதாட்டி கலெக்டர் அலுவலகத்தில் மனு


பெற்றோரை இழந்த பேரன்-பேத்திகளை பராமரிக்க முடியாமல் தவிக்கும் மூதாட்டி கலெக்டர் அலுவலகத்தில் மனு
x
தினத்தந்தி 7 July 2017 4:30 AM IST (Updated: 7 July 2017 2:49 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் பெற்றோரை இழந்த பேரன்-பேத்திகளை பராமரிக்க முடியாமல் தவிக்கும் மூதாட்டி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உதவி கேட்டு மனு அளித்தார்.

தேனி,

தேனி மாவட்டம் கூடலூர் சூளைமேட்டுத்தெருவை சேர்ந்தவர் வெள்ளைத்தாய் (வயது 80). இவர் தனது பேத்திகள் மாரியம்மாள் (14), முத்துமாரி (8), பேரன் முத்துக் குமார் (6) ஆகியோரை அழைத்துக் கொண்டு தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது கலெக்டர் அங்கு இல்லாததால் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஞானசேகரனிடம், பெற்றோர் இல்லாத தனது பேரக்குழந்தைகளை பராமரிக்க உதவி கேட்டு கோரிக்கை மனு அளித்தார்.மனு அளித்த வெள்ளைத்தாயிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

எனக்கு ராஜா என்ற மகனும், 2 மகள்களும் இருந்தனர். மகள்கள் திருமணமாகி வெளியூர்களில் வசிக்கிறார்கள். எனது மகனுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். எனது மருமகள் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். எனது மகனும் கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு நெஞ்சுவலியால் இறந்து விட்டார்.

எனக்கு வயதாகி விட்டதால் கூலி வேலைக்கு கூட போகமுடியில்லை. பேரன், பேத்திகள் பள்ளிக்கூடம் சென்று படித்து வருகின்றனர். அவர்களின் படிப்பு செலவுக்கும், பராமரிப்பு செலவுக்கும் கஷ்டப்படுகிறேன். சொந்த வீடு கிடையாது. வாடகை வீட்டில் தான் வசிக்கிறோம். எனக்கு முதியோர் உதவித்தொகை கேட்டு பலமுறை மனு அளித்தும் உதவித்தொகை கிடைக்கவில்லை. 2-வது பேத்தி முத்துமாரிக்கு கை, கால்களில் தலா 6 விரல்கள் உள்ளன. இதை அதிசய குழந்தை என்றும், இந்த குழந்தைக்கு பல லட்சம் ரூபாய் கொடுப்பதாகவும் கேரளாவில் இருந்து வந்த சிலர் கேட்டனர். பிச்சை எடுத்துக் கூட எனது பேரன், பேத்திகளை வளர்த்துக் கொள்கிறேன் என திருப்பி அனுப்பி விட்டேன். பெற்றோர் இல்லாத இந்த குழந்தைகளை பராமரிக்கவும், படிப்பு செலவுக்கும் அரசு உதவி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story