மணல் அள்ளிய டிராக்டர்களை சிறைபிடித்து போராட்டம்


மணல் அள்ளிய டிராக்டர்களை சிறைபிடித்து போராட்டம்
x
தினத்தந்தி 8 July 2017 2:45 AM IST (Updated: 7 July 2017 8:27 PM IST)
t-max-icont-min-icon

வாலாஜா அருகே பாலாற்றில் மணல் அள்ளிய டிராக்டர்களை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வாலாஜா,

வாலாஜா அருகே பாலாற்றில் மணல் அள்ளிய டிராக்டர்களை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர் மாவட்டம் வாலாஜா தாலுகா சாத்தம்பாக்கம் பாலாற்று பகுதியில் மட்டும் அரசு மணல் குவாரிக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் ஆற்காடு தாலுகாவிற்கு உட்பட்ட கிளாம்பாடி, புதுப்பாடி பகுதிகளில் உள்ள பாலாற்றில் தினந்தோறும் டிராக்டர்கள் மற்றும் மாட்டு வண்டிகளில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் ராணிப்பேட்டை உதவி கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த புதுப்பாடி மற்றும் கிளாம்பாடி கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் 100–க்கும் மேற்பட்டோர் நேற்று மணல் அள்ள வந்த டிராக்டர்களை திடீரென சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் வாலாஜா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் ராணிப்பேட்டை உதவி கலெக்டரிடம் தெரிவித்து மணல் அள்ளுவது தடுத்து நிறுத்தப்படும் என உறுதி அளித்தனர். அதைத் தொடர்ந்து பொதுமக்கள் டிராக்டர்களை விடுவித்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story