மொடக்குறிச்சி அருகே குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்


மொடக்குறிச்சி அருகே குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 7 July 2017 10:15 PM GMT (Updated: 2017-07-07T22:23:35+05:30)

மொடக்குறிச்சி அருகே குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அப்போது பொதுமக்களுக்கும், அதிகாரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

மொடக்குறிச்சி,

மொடக்குறிச்சி ஒன்றியம் ஆனந்தம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது காந்திநகர். இங்கு 500–க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

கடந்த 6 மாதங்களாக இங்குள்ள 3 ஆழ்குழாய் கிணற்று மோட்டார்களும் பழுதாகி கிடக்கிறது. இதுபற்றி பலமுறை மொடக்குறிச்சி வட்டார வளர்ச்சி அதிகாரி சசிகலாவிடம் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் தற்போதுவரை காவிரி குடிநீர் இணைப்பில் ஒரே ஒரு குழாய் அமைக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டுவருகிறது. ஒரு குழாய் மூலம் 500–க்கும் மேற்பட்டோருக்கு குடிநீர் வழங்கப்படுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்ததாக தெரிகிறது.

இந்தநிலையில் நேற்று காலை காந்திநகரை சேர்ந்த 100–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீரென்று ஈரோடு– முத்தூர் ரோட்டில் செல்லாத்தாபாளையம் பிரிவு குரங்கன்பள்ளம் என்ற இடத்தில் காலிக்குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து மொடக்குறிச்சி வட்டார வளர்ச்சி அதிகாரி சசிகலா மற்றும் அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது சசிகலா பொதுமக்களிடம், சாலைமறியலில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதாக கூறப்படுகிறது.

அதனால் ஆவேசம் அடைந்த பொதுமக்கள் சசிகலாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலைமறியலை கைவிட மறுத்துவிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே மொடக்குறிச்சி போலீசார் அதிகாரிகளை அழைத்து சென்றனர்.

பின்னர் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், ‘ஆழ்குழாய் கிணறுகளில் உள்ள குழாய்கள், மோட்டார்கள் பழுது என்ற பெயரில் காணாமல் போய்விட்டது. கேட்டால் தண்ணீர் இல்லை என்று காரணம் கூறுகிறார்கள். சில இடங்களில் பொதுமக்களே ஆழ்குழாய் மோட்டார்களை தங்கள் செலவில் பழுதுபார்த்து உள்ளனர். மொடக்குறிச்சி ஒன்றியத்தில் எந்த ஒரு குடிநீர் வசதி பணிகளும் செய்ய அதிகாரிகள் தயாராக இல்லை. மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்கள்.

அதைத்தொடர்ந்து போலீசார் மொடக்குறிச்சி தாசில்தார் மாசிலாமணியிடம் போனில் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது மாசிலாமணி போன் மூலம் பொதுமக்களிடம் பேசினார், மாலையில் குடிநீர் வழங்க ஏற்பாடுசெய்வதாக உறுதியளித்தார். அதை ஏற்றுக்கொண்டு பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story