ஜி.எஸ்.டி.வரியை கண்டித்து, குருசாமிபாளையம் பகுதியில் விசைத்தறியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்


ஜி.எஸ்.டி.வரியை கண்டித்து, குருசாமிபாளையம் பகுதியில் விசைத்தறியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்
x
தினத்தந்தி 8 July 2017 4:00 AM IST (Updated: 7 July 2017 10:41 PM IST)
t-max-icont-min-icon

ஜவுளிக்கு விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. வரியை கண்டித்து விசைத்தறியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராசிபுரம்,

நாமக்கல் மாவட்டம் குருசாமிபாளையம், கூனவேலம்பட்டி புதூர், 85.ஆர் குமாரபாளையம், பாலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இந்த விசைத்தறிகள் மூலம் துண்டு, தலையணை உறை, மெத்தை விரிப்பு, வேட்டி போன்ற ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், பக்கத்தில் உள்ள வெளி மாநிலங்களுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஜவுளிக்கு மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரி விதித்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்தும், அதனை ரத்து செய்யக் கோரியும் குருசாமிபாளையம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் விசைத்தறி துணி உற்பத்தியாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் அங்குள்ள விசைத்தறிகள் இயங்கவில்லை.

மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி குருசாமிபாளையம், கூனவேலம்பட்டிபுதூர், ஆண்டகளூர்கேட், பாலப்பாளையம் மற்றும் 85.ஆர் குமாரபாளையத்தை சேர்ந்த 200–க்கும் மேற்பட்ட விசைத்தறியாளர்கள் குருசாமிபாளையத்தில் உள்ள செங்குந்தர் சமுதாய கூடம் அருகே இருந்து ஊர்வலமாக புறப்பட்டு 85.ஆர்.குமாரபாளையம், ஆலமரம், வண்டிப்பேட்டை வழியாக மீண்டும் செங்குந்தர் சமுதாய கூடத்தை சென்டைந்தனர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்களை எழுப்பினார்கள். இந்த ஊர்வலத்துக்கு விசைத்தறி உற்பத்தியார்கள் சங்கத் தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் சீனிவாசன், பாலாஜி விசைத்தறி கூட்டுறவு உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் மீனாட்சிசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இது பற்றி விசைத்தறியாளர்கள் கூறியதாவது:–

விசைத்தறி தொழிலில் 10 நாட்களுக்கு ஒரு முறை வீதம் மாதம் 3 முறை ஜவுளிகளின் இருப்பு மற்றும் விற்பனை செய்யப்பட்ட விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்ற ஜி.எஸ்.டி விதிமுறையை பின்பற்றுவது சாத்தியமற்றது. மேலும் நூலை வாங்குவதற்கு 5 சதவீதம், சலவை மற்றும் பதப்படுத்துதலுக்கு 12 சதவீதம், துணி உற்பத்திக்கு 18 சதவீதம் என நூலை வாங்குவது முதல் துணியாக உற்பத்தி செய்யப்படும் வரை பல்வேறு கட்டமாக ஜி.எஸ்.டி வரியை செலுத்த வேண்டிய நிலைக்கு சிறிய அளவிலான விசைத்தறி துணி உற்பத்தியாளர்கள் தள்ளப்பட்டு உள்ளனர். இதனால் உற்பத்தி செலவை விட விற்பனை செலவு அதிகரிக்கும். விற்பனை இல்லாமல் தொழில் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகும். இலவச மின்சாரம் வழங்குவதை தவிர வேறு எந்த உதவியையும் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு அரசு வழங்கவில்லை. வேலை நிறுத்தம் காரணமாக குருசாமிபாளையம், கூனவேலம்பட்டி புதூர், 85.ஆர். குமாரபாளையம், பாலப்பாளையம், ஆண்டகளூர்கேட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 500–க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்களில் உள்ள 2,500 விசைத்தறிகள் இயங்கவில்லை. இதனால் நாள் ஒன்றுக்கு 50 லட்சம் ரூபாய்க்கு மேல் உற்பத்தி பாதிப்பு ஏற்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள.


Next Story