டிராக்டர் உரிமையாளர் தந்தைக்கு அரிவாள்மனை வெட்டு, விவசாயி கைது
திருத்துறைப்பூண்டி அருகே டிராக்டர் உரிமையாளர் தந்தைக்கு அரிவாள்மனை வெட்டு விவசாயி கைது
திருத்துறைப்பூண்டி,
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆதிரெங்கம் குடிச்சேத்தி, கீழத்தெருவை சேர்ந்தவர் துரைசாமி (வயது 60). இவருடைய மகன் குருநாதன் (வயது 32). டிராக்டர் உரிமையாளர். நேற்று இவர், கோபால் என்பவருக்கு சொந்தமான இடத்தில் இருந்து தனது டிராக்டரில் மண் எடுத்துக்கொண்டு, அதே பகுதியில் வேறு இடத்திற்கு கொட்டுவதற்காக சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த விவசாயி பொதுச்சாமி (34) என்பவர் வேறு வழி இருக்கும்போது எங்கள் தெரு வழியாக ஏன் டிராக்டரை ஓட்டி செல்கிறாய் என கேட்டு குருநாதனிடம், பொதுச்சாமி தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த பொதுச்சாமி அரிவாள்மனையை எடுத்து குருநாதனை வெட்ட முயன்றார். அப்போது அதனை தடுக்க வந்த துரைசாமி மீது அரிவாள்மனை வெட்டு விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவரை திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து குருநாதன் திருத்துறைப்பூண்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்–இன்ஸ்பெக்டர் கமல்ராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து பொதுச்சாமியை கைது செய்தனர்.