கொடைக்கானல் வனப்பகுதியில் புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
கொடைக்கானல் வனப்பகுதியில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கொடைக்கானல்,
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனப்பகுதி, வன விலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான இடங்கள் ‘ரிசர்வ் பாரஸ்ட்’ எனப்படும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, கருஞ்சிறுத்தை, மான், காட்டு பன்றி ஆகிய விலங்குகள் அதிக அளவில் உள்ளன.
சமீபத்தில் நடந்த வனவிலங்கு கணக்கெடுப்பில் கொடைக்கானல் வனப்பகுதியில் 19 யானைகள், 7 புலிகள் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் வனவிலங்குகளின் நடமாட்டத்தை தெரிந்து கொள்ளும் வகையில், அடர்ந்த வனப்பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை வனத்துறையினர் வைத்துள்ளனர்.
அதன்படி கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதியில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் ஒரு புலியின் உருவம் பதிவாகி உள்ளது. கொடைக்கானல் வனப்பகுதியில் புலிகள் வாழ்வதற்கான சூழல் நிலவுவதால், அதன் எண்ணிக்கை அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. கேமராவில் பதிவான புலிக்கு 7 வயது இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதுகுறித்து வனவிலங்கு ஆர்வலர்கள் கூறும்போது, கொடைக்கானல் வனப்பகுதிக்கு கேரள மாநிலத்தில் இருந்து வனவிலங்குகள் வருகின்றன. வனப்பகுதியில் வசிக்கும் புலி உள்ளிட்ட விலங்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை பாதுகாக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.