சிறப்புதேர்வு முடிவு வெளியானதில் குளறுபடி: பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர், உறவினர்கள் போராட்டம்


சிறப்புதேர்வு முடிவு வெளியானதில் குளறுபடி: பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர், உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 8 July 2017 4:00 AM IST (Updated: 8 July 2017 12:38 AM IST)
t-max-icont-min-icon

சிறப்புதேர்வு முடிவு வெளியானதில் குளறுபடி: பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர், உறவினர்கள் காத்திருப்பு போராட்டம்

காட்டுமன்னார்கோவில்

கா£ட்டுமன்னார் கோவிலில் நடந்த சிறப்பு தேர்வு முடிவு வெளியானதில் குளறுபடி ஏற்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர், உறவினர்கள் உதவி தொடக்க கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அரசு பள்ளிகளில் 5–ம் வகுப்பில் சிறப்பிடம் பிடிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ஒன்றிய அளவில் சிறப்பு தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வில் முதலிடம் பிடிக்கும் மாணவர்கள் 6–ம் வகுப்பு முதல் பிளஸ்–2 வரை அவர்கள் விரும்பும் தனியார் பள்ளிகளில் சேர்ந்து படிக்கலாம். இவர்களுக்கான கல்வி செலவு அனைத்தையும் அரசே ஏற்றுக்கொள்ளும்.

அந்த வகையில், காட்டுமன்னார்கோவில் ஒன்றியத்தில் இதற்கான மாணவரை தேர்வு செய்யும் வகையில் சிறப்பு தேர்வு காட்டுமன்னார் கோவிலில் உள்ள ஒரு பள்ளியில் நடைபெற்றது. இந்த தேர்வை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த 49 மாணவ, மாணவிகள் எழுதினர்.

தேர்வு முடிந்த பின்னர், சில மணிநேரத்திலேயே அதற்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதில் கக்கன்நகர் ஆதிராவிடர் தொடக்கப்பள்ளியை சேர்ந்த மாணவி அருணா என்பவர் முதல் இடம் பிடித்தவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தேர்வு நடத்திய அதிகாரிகள் அறிவித்தனர். இதற்கிடையே அடுத்த சில மணிநேரத்தில் மற்றொரு பள்ளியை சேர்ந்த மாணவி, அருணாவை விட அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளதாக அறிவித்தனர்.

திடீரென இதுபோன்ற குளறுபடி நடந்தது, அருணாவின் பெற்றோரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுபற்றி அறிந்த அருணாவின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் காட்டுமன்னார்கோவிலில் உள்ள உதவி தொடக்க கல்வி அலுவலகத்தை நேற்று முன்தினம் முற்றுகையிட்டனர். அப்போது கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் ராமதாஸ் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை.

இதையடுத்து ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட அருணாவை தான் தேர்வில் முதல் இடம் பிடித்தவர் என்று அறிவிக்க வேண்டும் இல்லையென்றால் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறி போராட்டத்தை கைவிட்டு அருணாவின் பெற்றோர், உறவினர்கள் உள்பட அனைவரும் கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை 10.30 மணிக்கு அருணாவின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் பல்வேறு அரசியில் கட்சியினர் உதவி தொடக்க கல்வி அலுவலகம் முன்பு மீண்டும் ஒன்று திரண்டனர். அங்கு அவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உதவி தொடக்க கல்வி அலுவலர் கலைச்செல்வி, கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் ராமதாஸ், காட்டுமன்னார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷியாம்சுந்தர், சப்–இன்ஸ்பெக்டர் சக்திகணேஷ் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில், அருணா மற்றும் புதிதாக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட மற்றொரு மாணவி ஆகிய இருவருக்கு மட்டும் மீண்டும் தேர்வு நடத்தப்படும், அதில் முதல் இடம் பிடிப்பவர்களை தனியார் பள்ளியில் அரசு செலவில் படிக்க தகுதியானவராக தேர்வு செய்யப்படுவார்கள் என்று அதிகாரிகள் கூறினர். மேலும் இவர்களுக்கான தேர்வு வருகிற 12–ந்தேதி(புதன்கிழமை) நடைபெறும் என்று அதிகரிகள் தெரிவித்தனர். இதையேற்று அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த காத்திருப்பு போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வட்ட செயலாளர் பிரகாஷ் தலைமையில் நிர்வாகி முத்துராமானுஜம், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அந்தோணிசிங், நாகராஜன், காட்டுமன்னார்கோவில் ஆட்டோ சங்க தலைவர் பாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர். சிறப்பு தேர்வு முடிவுகளில் ஏற்பட்ட குளறுபடியை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவாக அடுத்தடுத்து 2 நாட்கள் நடந்த போராட்டம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Next Story