முதல்–மந்திரி பதவியை தக்க வைத்துக்கொள்ள சித்தராமையா எதை வேண்டுமானலும் செய்வார் கோட்டே எம். சிவண்ணா கடும் தாக்கு
முதல்–மந்திரி சித்தராமையா தனது பதவியை தக்க வைத்துக்கொள்வதற்காக எதை வேண்டுமானலும் செய்வார் என்று பா.ஜனதா கட்சியைச் சேர்ந்த முன்னாள் மந்திரி கோட்டே எம்.சிவண்ணா கூறினார்.
மைசூரு,
முதல்–மந்திரி சித்தராமையா தனது பதவியை தக்க வைத்துக்கொள்வதற்காக எதை வேண்டுமானலும் செய்வார் என்று பா.ஜனதா கட்சியைச் சேர்ந்த முன்னாள் மந்திரி கோட்டே எம்.சிவண்ணா கூறினார்.
விவசாயிகள் தற்கொலைமைசூரு மாவட்ட பா.ஜனதா கட்சி தலைவரும், முன்னாள் மந்திரியுமான கோட்டே எம்.சிவண்ணா மைசூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
இந்த ஆண்டு மாநிலத்தில் ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக அணைகளில் போதிய நீர் இல்லாமல் பயிர்கள் கருகியது. இதனால் விவசாயிகள் பலர் தற்கொலை செய்து கொண்டனர். குறிப்பாக மைசூரு, மண்டியா, சாம்ராஜ்நகர் மாவட்டங்களில் தான் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். பல மாவட்டங்களில் தற்போதுதான் பருவமழை பெய்யத்தொடங்கி உள்ளது.
இதையடுத்து ஏரிகள், குளங்களும் நிரம்ப தொடங்கி உள்ளன. அணைகளுக்கும் மெல்ல, மெல்ல நீர் வரத்தொடங்கி உள்ளது. மண்டியா மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.எஸ். அணையில் தற்போது 76.05 கன அடி தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது.
பதவிக்காக...அணைகளின் நீர் நிலைமை இப்படி இருக்க மாநிலத்தில் உள்ள விவசாயிகளின் நலனில் அக்கறை கொள்ளாமல் முதல்–மந்திரி சித்தராமையா கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட்டு உள்ளார். இதுகுறித்து அவரிடம் கேட்டால், தண்ணீர் திறக்காவிட்டால் தமிழக அரசு வழக்கு தொடரும் என காரணம் கூறி வருகிறார். மேலும் செயற்கை மழை பெய்ய வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறுகிறார். செயற்கை மழை என்பது எல்லாம் விஞ்ஞான ரீதியாக தோல்வி அடைந்த ஒரு முயற்சி. அதை நம்பி தற்போது தமிழகத்திற்கு தண்ணீர் விடவேண்டுமா?.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தண்ணீர் திறந்து விட தமிழக அரசு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அப்போது தனது பதவியே போனாலும் பரவாயில்லை அணைகளில் போதிய நீர் இல்லை என சித்தராமையா கூறி வந்தார். சித்தராமையா தனது பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக எதை வேண்டுமானலும் செய்வார்.
இவ்வாறு அவர் கூறினார்.