தமிழகத்தில் தான் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக வாழ்கிறார்கள்


தமிழகத்தில் தான் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக வாழ்கிறார்கள்
x
தினத்தந்தி 8 July 2017 8:30 PM GMT (Updated: 8 July 2017 2:35 PM GMT)

தமிழகத்தில் தான் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக வாழ்கிறார்கள் என தேசிய மத நல்லிணக்க கூட்டமைப்பு மாநில மாநாட்டில் வி.ஐ.டி. துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் பேசினார்.

காட்பாடி,

தமிழகத்தில் தான் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக வாழ்கிறார்கள் என தேசிய மத நல்லிணக்க கூட்டமைப்பு மாநில மாநாட்டில் வி.ஐ.டி. துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் பேசினார்.

தேசிய மத நல்லிணக்க கூட்டமைப்பின் மாநில பிரதிநிதிகள் மாநாடு வேலூரில் நேற்று நடந்தது. மாநாட்டிற்கு கூட்டமைப்பின் நிறுவனர் பால்ராசா தமிழ்மாறன் தலைமை தாங்கினார். ஜெயின் கோசாலை அறங்காவலர் ருக்ஜீ.ராஜேஷ்குமார் முன்னிலை வகித்தார். தேசிய தலைவர் எம்.சிவக்குமார் வரவேற்றார்.

ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள் ஆகியோர் கலந்துகொண்டு, வி.ஜி.பி. குழுமத்தலைவர் வி.ஜி.சந்தோ‌ஷம், தொழில் அதிபர்கள் முகமது யூசுப், ஜெ.லட்சுமணன், புலவர் பதுமனார், உதவும் உள்ளங்கள் தலைவர் ரா.சந்திரசேகர் உள்பட பலருக்கு ‘மத நல்லிணக்க மாமனிதர் விருதை’ வழங்கினர்.

மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக வி.ஐ.டி. துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் கலந்துகொண்டு பேசியதாவது:–

நம்முடைய முன்னோர்கள் பஞ்சபூதங்களான இயற்கையையும், பின்னர் கல்லில் சிலை வடித்து வணங்கினார்கள். ஒரு குளத்துக்கு நான்கு பக்கமும் படிக்கட்டுகள் உள்ளன. மனிதர்கள் நான்கு திசைகளிலும் இறங்கி குளத்தில் உள்ள தண்ணீரை எடுத்து செல்கிறார்கள். குளத்தில் உள்ள தண்ணீர் தான் கடவுள். படிக்கட்டுகள் தான் மதம்.

வானத்துக்கு எல்லைகள் இல்லை. பூமிக்கு எல்லைகள் உண்டு. மனிதன் தான் பூமியில் எல்லைகளை வரையறை செய்துள்ளான். வானம் கடவுள். பூமி தான் மதம். ஒரே கடவுள்தான் உள்ளார். அவரவருக்கு தகுந்ததுபோல் ஒவ்வொரு மதத்தினரும் வழிபடுகிறார்கள்.

உலகத்தில் 200–க்கும் மேற்பட்ட நாடுகளும், 4 ஆயிரத்து 500 மதங்களும், 8 ஆயிரம் மொழிகளும் உள்ளன. இந்தியாவில் 29 மாநிலங்களும், 7 யூனியன் பிரதேசங்கள், 800 மொழிகள் உள்ளன.

தமிழ்நாட்டில் தான் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக வாழ்கிறார்கள். நாம் ஒற்றுமையாக இருந்தாலும், அரசியல்வாதிகள் தான் ஓட்டுக்காக நம்மை பிரிக்கிறார்கள். மனிதனுக்கு ஆசை அதிகமானால் கோபம், பொறாமை வருகிறது. நாம் நம்பிக்கையோடு இருந்தால் எந்தவொரு செயலையும் செய்ய முடியும். அதைத்தான் எல்லா மதங்களும் வலியுறுத்துகின்றன. மதம் என்பது என்ன? நீங்கள் நன்றாக இருக்க வேண்டும். ஆரோக்கியமாக இருக்க வேண்டும். மற்றவர்களிடம் அன்பு செலுத்த வேண்டும்.

யோகாசனம் செய்யும்போது மூச்சு இழுத்து விடும்போது 3 மதங்களும் ஒன்றாக இணைகிறது. இதில் வேறுபாடு எதுவும் இல்லை. நாம் ஒற்றுமையாக வாழ்ந்து, இந்தியாவை சொர்க்க பூமியாக மாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அவரைத்தொடர்ந்து வேலூர் மாவட்ட முன்னாள் கலெக்டர் செ.ராஜேந்திரன் ‘மத நல்லிணக்கம்’ குறித்து பேசினார்.

மாநாட்டில், அனைத்து மதங்களையும் உள்ளடக்கிய மத நல்லிணக்கத்தை அரசியல் சாசனத்தின் அட்டவணை 25–ல் அரசு சேர்க்க வேண்டும், ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை பள்ளி, கல்லூரி பாடப்புத்தங்களில் மத நல்லிணக்க பாடல்கள், பாடங்களை சேர்க்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் தொழில் அதிபர்கள் முகமது உஸ்மாயின், நந்தகுமார், செந்தில்குமார், பன்னீர்செல்வம், ஏசானுல்லா பாபு, வக்கீல் பி.டி.கே.மாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தேசிய பொருளாளர் ஜெ.பரந்தாமன் நன்றி கூறினார். மாநாட்டு நிகழ்ச்சியை பொதுச்செயலாளர் பைரோஸ் அகமது தொகுத்து வழங்கினார்.


Next Story