இந்திய கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் ஞானய்யா மரணம்


இந்திய கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் ஞானய்யா மரணம்
x
தினத்தந்தி 9 July 2017 3:45 AM IST (Updated: 9 July 2017 1:15 AM IST)
t-max-icont-min-icon

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஞானய்யா நேற்று கோவை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

கோவை,

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கியவர் ஞானய்யா (வயது 97). இவர் உடல்நலக்குறைவு காரணமாக கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் நேற்று காலை சுமார் 4.30 மணி அளவில் சிகிச்சை பலனின்றி ஞானய்யா மரணமடைந்தார்.

மறைந்த ஞானய்யா, மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிறந்தவர். இவர் 1940–ம் ஆண்டு தனது 20–வது வயதில் கம்யூனிஸ்டு கட்சியில் சேர்ந்தார். தபால்நிலையத்தில் பணியில் சேர்ந்த அவர், தபால் துறை பணியாளர் சங்கத்தில் தேசிய பொது செயலாளராக பதவி வகித்தார். கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக பத்து ஆண்டுகளும், தேசியக்குழு உறுப்பினராகவும், மத்திய கட்டுப்பாட்டுக்குழு தலைவராகவும் இருந்துள்ளார். ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தில் அகில இந்திய பொதுச்செயலாளராகவும் பதவி வகித்தார். பணி ஓய்வு பெற்ற பின்னர் அவர் கோவையில் வசித்து வந்தார்.

மறைந்த ஞானய்யாவின் மனைவி அருள் ஜெயமணி கடந்த 1993–ம் ஆண்டு இறந்து விட்டார். அவருக்கு ஒரு மகளும், பேத்தியும் உள்ளனர். அவர்கள் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். மறைந்த ஞானய்யா, உலகம் அழியும், சோசலிசத்தில் வேலை நிறுத்தம், ரசாயன யுத்தம், புயல் கிளப்பிய மண்டல் உள்பட பல புத்தகங்களை எழுதி உள்ளார்.

அமெரிக்காவில் இருக்கும் மகளின் வருகைக்காக அவரது உடல், தற்போது ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. வருகிற 13–ந்தேதி அவரது உடல் அடக்கம் நடக்கிறது.


Next Story