கவர்னர் கிரண்பெடிக்கு எதிரான போராட்டம் தொடரும்
கவர்னர் கிரண்பெடிக்கு எதிரான போராட்டம் தொடரும் சிவா எம்.எல்.ஏ. அறிக்கை
புதுச்சேரி,
புதுவை தெற்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
புதுவை சட்டசபைக்கு 3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமிப்பது தொடர்பாக புதுவை அரசின் பரிந்துரையோ, ஆலோசனையோ இல்லாமல் சர்வாதிகார முறையில் ஆர்.எஸ்.எஸ். நபர்களை மத்திய அரசு நியமித்துள்ளது. அவர்களுக்கு கவர்னர் கிரண்பெடி பதவிப்பிரமாணம் செய்துவைத்துள்ளார்.
ஜனநாயக மரபுகளையும், மாநில மக்களின் உரிமைகளையும் புறக்கணித்து ஜனநாயக படுகொலை செய்த புதுவை கவர்னர் கிரண்பெடி, அவருக்கு உறுதுணையாக இருந்த மத்திய அரசை கண்டித்து தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் மற்றும் சமூக அமைப்புகள் நடத்திய முழுஅடைப்பு வெற்றிகரமாக நடந்துள்ளது.
இந்த போராட்டத்தை தங்களது உரிமை போராட்டமாக கருதி மக்கள் முழுமையான ஒத்துழைப்பை தந்துள்ளனர். இது இப்போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி மட்டுமல்ல, சட்டத்தை புறக்கணித்து தான்தோன்றித்தனமாக செயல்படும் கவர்னர் கிரண்பெடிக்கு கிடைத்த சவுக்கடியாகும்.
இதை உணர்ந்து மத்திய அரசு கிரண்பெடியை திரும்ப பெறுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இலை என்றால் அவருக்கு எதிர்ப்பான புதுவை மக்களின் போராட்டம் தொடரும் என்று எச்சரிக்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் சிவா எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.