மதுக்கடையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்


மதுக்கடையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 July 2017 4:00 AM IST (Updated: 10 July 2017 3:00 AM IST)
t-max-icont-min-icon

பள்ளிபாளையம் அருகே மதுக்கடையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பள்ளிபாளையம்,

பள்ளிபாளையம் அருகே உள்ள தாஜ்நகர் குடியிருப்பு பகுதியில் சுமார் ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதையொட்டி விளாங்காட்டூர், தொட்டிபாளையம் மற்றும் காகித ஆலை குடியிருப்புகளும் உள்ளன.

இந்த நிலையில் எஸ்.பி.பி. காலனியில் இருந்து தாஜ்நகர் செல்லும் வழியில் சமீபத்தில் மதுக்கடை ஒன்று திறக்கப்பட்டது. இதையொட்டி வழிபாட்டு தலங்கள் இருப்பதாலும், குடியிருப்புகளும் உள்ளதாலும், இந்த கடையை மூட வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் கடை தொடங்கும்போதே ஆர்ப்பாட்டம் செய்தனர். இருப்பினும் இந்த கடை இன்னும் மூடப்படவில்லை.

இந்த நிலையில் நேற்று தாஜ்நகர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 300 பேர் திரண்டு வந்து, மதுக்கடையை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் மதுக்கடையை திறக்க கூடாது எனவும், நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் கடை முன்பு நின்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து வந்த குமாரபாளையம் தாசில்தார் ரகுநாதன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின் போது அந்த மதுக்கடை மூடப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் நேற்று அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story