கோடநாடு மர்ம மரணங்கள் குறித்து விசாரிக்க தனிக்குழு அமைக்க வேண்டும்
கோடநாடு மர்ம மரணங்கள் குறித்து விசாரிக்க தனிக்குழு அமைக்க வேண்டும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
கோவை,
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதை தடுப்பதற்காக எல்லை தாண்டி வந்தால் அபராதம் விதிக்கப்படும் என்ற இலங்கை அரசின் புதிய சட்டத்தால் தமிழக மீனவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. அந்த சட்டம் இலங்கை அரசின் உள்நாட்டு அரசியல் ரீதியானது ஆகும்.
இந்தியா தனது அண்டை நாடுகளுடன் தொடர்ந்து நட்புறவை வைத்துக்கொள்ள தான் விரும்புகிறது. அதே நேரம் அண்டை நாடுகள் சீண்டினால் அதற்கு தக்க பதிலடி கொடுக்கவும் மத்திய அரசு தயாராக இருக்கிறது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் உள்ள எஸ்டேட்டில் கொலை, கொள்ளை நடந்தது. அதன்பிறகும் அங்கு பல்வேறு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இங்கு நடக்கும் உயிரிழப்பு மர்மமாகவே உள்ளது.
எனவே அங்கு நடந்துள்ள மர்மமான மரணங்கள் குறித்து விசாரணை நடத்த தனிக்குழு அமைத்து, முழுமையாக விசாரணை நடத்தி, அங்கு நடக்கும் சம்பவங்களை மறைக்காமல் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் தமிழகத்தில் ஆட்சி கலைக்கப்படும் என்று கூறுவதில் உண்மை இல்லை. தமிழகத்தில் மட்டுமல்ல, வேறு எந்த மாநிலத்திலும் ஆட்சி செய்து வரும் அரசை கலைக்க மத்திய அரசு தயாராக இல்லை. அவர்களாகவே வீழ்ந்தால் அது அவர்களது கட்சி சார்ந்த பிரச்சினை.
இவ்வாறு அவர் கூறினார்.