தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஆட்சி அமையும்


தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஆட்சி அமையும்
x
தினத்தந்தி 11 July 2017 4:45 AM IST (Updated: 11 July 2017 1:21 AM IST)
t-max-icont-min-icon

பாலமேட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி விரைவில் அமையும் என்று தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா பேசினார்.

அலங்காநல்லூர்,

அலங்காநல்லூர் ஒன்றியம் பாலமேட்டில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் மற்றும் சட்டமன்ற வைரவிழாவையொட்டி பொதுக்கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் கென்னடிகண்ணன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் பழனிவேல் முன்னிலை வகித்தார். முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் பி.மூர்த்தி எம்.எல்.ஏ, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தி.மு.க. கொள்கைபரப்பு செயலாளர் திருச்சி சிவா எம்.பி. பேசியதாவது:– கடந்த தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை, தற்போதைய அரசால் செயல்படுத்த முடியவில்லை. இந்த ஆட்சியில் நிர்வாகச் சீர்கேடுகள் நிறைந்துள்ளன. மக்கள் பிரச்சினைகளை தீர்க்கவும், அதற்காக நடைபெறும் மானியக்கோரிக்கையின் போது, சட்டமன்ற விவாதங்களில் கலந்து கொண்டு பேசுவதற்கு எதிர்கட்சி உறுப்பினர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

கடந்த தி.மு.க ஆட்சியில் பாலமேடு, சோழவந்தான் ஆகிய இடங்களில் துணை மின் நிலையங்கள் கொண்டுவரப்பட்டன. அதே போல் மதுரை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கக்கூடிய அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையில் கரும்பு கழிவுகளில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு ரூ.110 கோடியில் துணை மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டது. 2010–ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டம் இன்று வரை பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது.

மேலும் மத்திய அரசின் உத்தரவுப்படி ஜி.எஸ்.டி. சேவைவரி மற்றும் நீட்தேர்வு முறைகளை தமிழக அரசு செயல்படுத்தி ஏழை, நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தையும், மாணவ, மாணவிகளின் மேற்படிப்பு கனவுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. கடல்நீரை குடிநீராகமாற்றுவதற்கான திட்டமும், குடிநீரை சேமித்து பாதுகாப்பான முறையில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மூலம் வினியோகம் செய்யப்பட்டதும் தி.மு.க ஆட்சியில் தான்.

வருகிற நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் தி.மு.க. அமோக வெற்றி பெறும். நெடுவாசல், கதிராமங்கலம், டாஸ்மாக் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளிலும் மக்கள் நலனுக்காக முன்னின்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் போராடி வருகிறார். இந்த சூழ்நிலையில் தமிழக மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்க்கும், மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஆட்சி விரைவில் அமையும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் நிர்வாகிகள் தன்ராஜ், பாலராஜேந்திரன், சிறைச்செல்வன், மாவட்ட நிர்வாகிகள் சேகர், விஜலட்சுமி முத்தையன், ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ், ராஜேந்திரன். கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தங்கதுரை வடிவேல்முருகன் நன்றி கூறினர்.


Next Story