கடனுக்கு ஜாமீன் போட்டதால் வீடு அபகரிப்பு: கலெக்டர் அலுவலகத்தில் விதவை பெண் தீக்குளிக்க முயற்சி


கடனுக்கு ஜாமீன் போட்டதால் வீடு அபகரிப்பு: கலெக்டர் அலுவலகத்தில் விதவை பெண் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 11 July 2017 3:45 AM IST (Updated: 11 July 2017 1:52 AM IST)
t-max-icont-min-icon

கடனுக்கு ஜாமீன் போட்டதால் அபகரிக்கப்பட்ட வீட்டை மீட்டுத்தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் விதவை பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடலூர்,

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்புக்கூட்டம் நேற்று நடந்தது. அப்போது கலெக்டரிடம் மனுக்கொடுப்பதற்காக வடலூர் ராமர்கோவில் தெருவைச்சேர்ந்த ரவி என்பவரது மனைவி மல்லிகா(வயது40) வந்திருந்தார். அவர் தீக்குளிப்பதற்காக கொண்டு வந்திருந்த மண்எண்ணெய் பாட்டிலை திடீரென எடுத்து திறந்து மண்எண்ணெயை தன் உடல் மீது ஊற்றினார்.

இதை கவனித்த பொதுமக்களும் போலீசாரும் பாய்ந்து சென்று அவர் தீக்குளிக்கவிடாதபடி தடுத்து காப்பாற்றினார்கள். இந்த சம்பவத்தால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவரை போலீசார் வாகனத்தில் ஏற்றி போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் மல்லிகா கூறியதாவது:–

எனது கணவர் ரவி கடந்த மாதம் இறந்து விட்டார். எனது கணவர் இருந்த போது, இன்னொருவர் வாங்கிய 16½ லட்சம் ரூபாய் கடனுக்காக ஜாமீன் கையெழுத்து போட்டார். அந்த நபர், கடன் தொகையை திருப்பிச்செலுத்தவில்லை. இதனால் அவருக்கு ஜாமீன் கையெழுத்து போட்டிருந்த எனது கணவரின் வீட்டை, கடன் கொடுத்தவர் அபகரித்துக்கொண்டார்.

இதையடுத்து அவருக்கு 5 லட்சம் ரூபாய் கொடுத்து விட்டு எங்கள் வீட்டிலேயே வசித்தோம். தற்போது அவர் எங்கள் வீட்டை விற்க முயற்சி செய்கிறார். அவரிடம் கடன் வாங்கியவரிடம் கடன் தொகையை வசூலிக்காமல் எங்கள் வீட்டை அபகரித்து வைத்துக்கொண்டு விற்க முயற்சிப்பது என்ன நியாயம்?. எனவே எங்கள் வீட்டை மீட்டுத்தர கலெக்டரும், அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மல்லிகா கூறினார்.


Next Story