மாநில அளவிலான கைப்பந்து போட்டி: தமிழ்நாடு போலீஸ் அணி சாம்பியன்


மாநில அளவிலான கைப்பந்து போட்டி: தமிழ்நாடு போலீஸ் அணி சாம்பியன்
x
தினத்தந்தி 11 July 2017 4:15 AM IST (Updated: 11 July 2017 2:38 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரியில் நடந்த மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் தமிழ்நாடு போலீஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. பெண்கள் பிரிவில் சென்னை அணி முதலிடம் பிடித்தது.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட கைப்பந்து கழகம் மற்றும் தர்மபுரி பாய்ஸ் கிளப் இணைந்து நடத்திய மாநில அளவிலான ஆண்கள், பெண்கள் கைப்பந்து போட்டி தர்மபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. மின்னொயில் நடைபெற்ற இந்த போட்டிகளில் மாநிலம் முழுவதிலும் இருந்து பல்வேறு அணிகள் பங்கேற்றன. இந்த போட்டிகளை தர்மபுரி துணை போலீஸ் சூப்பிரண்டு காந்தி தொடங்கி வைத்தார்.

ஆண்கள் பிரிவுக்கான போட்டிகளில் தமிழ்நாடு போலீஸ் அணி முதலிடத்தை பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது. தர்மபுரி பாய்ஸ் கிளப் அணி 2-ம் இடத்தையும், சேலம் பாய்ஸ் கிளப் அணி 3-ம் இடத்தையும் பெற்றன. இதேபோன்று பெண்கள் பிரிவுகளுக்கான போட்டிகளில் சென்னை ஜெ.பி.ஆர்.கல்லூரி அணி முதலிடத்தை பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது. ஈரோடு பி.கே.ஆர். அணி 2-ம் இடத்தையும், சேலம் சாய் விடுதி அணி 3-ம் இடத்தையும் பெற்றன.

இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கும் விழா மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் நஞ்சப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட கைப்பந்து கழக தலைவர் டி.என்.வி.செல்வராஜ், முன்னாள் எம்.பி. எம்.ஜி.சேகர், முன்னாள் நகராட்சி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், மாவட்ட கைப்பந்து கழக செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினர்.

விழாவில் போட்டிகளை நடத்திய நடுவர்கள் கவுரவிக்கப்பட்டனர். இதில் அரிமா சங்க முன்னாள் தலைவர் சிவப்பிரகாசம், தர்மபுரி வாக்கர்ஸ் கிளப் தலைவர் எஸ்.எம்.ஏ.வெங்கடேசன் மற்றும் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story