கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை முயற்சி எச்சரிக்கை மணி ஒலித்ததால் பணம் தப்பியது


கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை முயற்சி எச்சரிக்கை மணி ஒலித்ததால் பணம் தப்பியது
x
தினத்தந்தி 11 July 2017 4:45 AM IST (Updated: 11 July 2017 2:41 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை அருகே கோவில் உண்டியலை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவர்கள், எச்சரிக்கை மணி ஒலித்ததால் அங்கிருந்து தப்பி ஓடினர். இதனால் உண்டியலில் இருந்த பணம் தப்பியது.

மயிலாடுதுறை,

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மாப்படுகை ரெயிவே கேட் பகுதியில் சுமங்கலி காளியம்மன் கோவில் உள்ளது. சம்பவத்தன்று இரவு வழக்கமான பூஜைகளுக்கு பின்னர் கோவில் பூட்டப்பட்டது. இந்த நிலையில் நள்ளிரவில் மர்ம நபர்கள் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அவர்கள் கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து, பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர். அப்போது கோவிலில் பொருத்தப்பட்டிருந்த எச்சரிக்கை மணி ஒலித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மர்ம நபர்கள் உண்டியலில் இருந்த பணத்தை கொள்ளையடிக்காமல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதனிடையே கோவிலில் எச்சரிக்கை மணி ஒலிப்பதை கேட்ட கோவில் அர்ச்சகர் ஸ்ரீதர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கோவிலுக்கு ஓடி வந்து பார்த்தனர். அப்போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் கோவிலுக்குள் சென்று பார்த்தபோது, அங்கிருந்த உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது. ஆனால் பணம் அப்படியே இருந்தது.


மர்ம நபர்கள் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளையடிக்க முயன்றபோது எச்சரிக்கை மணி ஒலித்ததால் பணம் தப்பியது தெரியவந்தது. இதுகுறித்து மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் உண்டியலை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். 

Related Tags :
Next Story