நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் அங்கப்பிரதட்சனம் மேற்கொள்ள ரூ.100 கட்டணம் வசூலிப்பு

மைசூரு நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் அங்கப்பிரதட்சனம் மேற்கொள்ள ரூ.100 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மைசூரு,
மைசூரு நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் அங்கப்பிரதட்சனம் மேற்கொள்ள ரூ.100 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த புதிய கட்டண விதிமுறையால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடுவில் கபிலா நதிக்கரையோரத்தில் நஞ்சுண்டேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு சிவன், ஸ்ரீகண்டேஸ்வரராக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். பழமையான இந்தக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். மேலும் இந்தக்கோவில் தென்னிந்தியாவின் காசி என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. இதனால் இந்தக்கோவிலுக்கு கர்நாடகத்தில் இருந்து மட்டுமல்லாது, வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து செல்கிறார்கள்.இப்படி பல்வேறு சிறப்புமிக்க இந்தக்கோவிலில், நஞ்சுண்டேஸ்வரரை வேண்டி விரதம் இருக்கும் பக்தர்கள் அங்கப்பிரதட்சனம் உள்பட பல்வேறு வகைகளில் நேர்த்திக்கடன்களை செலுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் இந்தக்கோவிலில் பக்தர்கள் அங்கப்பிரதட்சனம் மேற்கொள்ள தற்போது ரூ.30–ல் இருந்து ரூ.100 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, கோவில் வெளிப்புறத்தில் அங்கப்பிரதட்சனம் செய்ய ரூ.30–ம், கோவில் வளாகத்திற்குள் அங்கப்பிரதட்சனம் செய்ய ரூ.100–ம் என கட்டணம் வசூலிக்கப்படுகிறது.இந்த புதிய கட்டண விதிமுறை கடந்த 7 நாட்களுக்கு முன்பு இருந்து அமல்படுத்தப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. அங்கப்பிரதட்சனம் மேற்கொள்ள வரும் பக்தர்கள் இந்த புதிய கட்டண விதிமுறையால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து கோவிலுக்கு வந்திருந்த ஒரு பக்தர் கூறியதாவது:–கடவுளுக்கு வேண்டி அங்கப்பிரதட்சனம் செய்ய எந்தக்கோவிலும் கட்டணம் கிடையாது. ஆனால் புதிதாக இந்தக்கோவிலில் மட்டும்தான் அங்கப்பிரதட்சனம் செய்வதற்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது கண்டிக்கத்தக்கது. கடவுளை வேண்டி வரும் பக்தர்களிடம் கட்டணம் வசூலிப்பதே கொடுமையானது. அதிலும் நேர்த்திக்கடன் செலுத்த வரும் பக்தர்களிடம் கட்டணம் வசூலிப்பது மிகவும் வேதனைக்குரியது. கட்டணம் செலுத்த முடியாத ஏழை, எளிய மக்கள் ஆற்றில் குளித்துவிட்டு சிவனை வேண்டி நடுரோட்டிலேயே அங்கப்பிரதட்சனம் செய்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வரும் கொடுமைகள் தற்போது அரங்கேறி வருகிறது. இது தடுக்கப்பட வேண்டும்.
மேலும் ரூ.30 கட்டணம் செலுத்தும் பக்தர்களை கோவிலுக்கு வெளிப்புறத்தில் அங்கப்பிரதட்சனம் செய்ய கோவில் நிர்வாகிகள் அறிவுறுத்துகின்றனர். அது ஆபத்தானது. அந்தப்பகுதியில் ஏராளமான வாகனங்கள் வந்து செல்லும். மேலும் அங்கு பக்தர்கள் அங்கப்பிரதட்சனம் செய்தால் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படும். எனவே இந்த கட்டண விதிமுறையை கோவில் நிர்வாகத்தினர் மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






