கோரிக்கைகளை வலியுறுத்தி கவுரவ விரிவுரையாளர்கள் 2–வது நாளாக போராட்டம்
சிவகங்கை மற்றும் காரைக்குடியில் அரசு கலைக்கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 2–வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை,
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரைத்த ஊதியமான ரூ.25 ஆயிரத்தை மாத சம்பளமாக வழங்க வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் நேற்று முன்தினம் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில் நேற்று 2–வது நாளாக கருப்பு பேஜ் அணிந்து, கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கோஷமிட்டும் தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் 64 கவுரவ விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்திற்கு அரசு கலைக்கல்லூரி கவுரவ விரிவுரையாளர் நலச்சங்க மண்டல தலைவர் ஆங்கிலத்துறை பேராசிரியர் மோகன் தலைமை தாங்கி போராட்ட உரையாற்றினார்.
இதேபோல் காரைக்குடியில் உள்ள அழகப்பா அரசு கலைக்கல்லூரி முன்பும் கவுரவ விரிவுரையாளர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றினர்.
கவுரவ விரிவுரையாளர்களின் இந்த போராட்டத்தால் சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கல்லூரி, அரசு மகளிர் கல்லூரி, காரைக்குடியில் உள்ள அழகப்பா அரசு கல்லூரி மற்றும் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் வகுப்புகள் நடக்கவில்லை. இதனால் மாணவர்கள், விரிவுரையாளர்கள் போராட்டத்தால் வகுப்புகள் நடைபெறாது என்பதை தெரிந்து வீட்டிற்கு புறப்பட்டனர். போராட்டம் காரணமாக கல்லூரி மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது.