கதிராமங்கலம் பிரச்சினையில் அரசை கண்டித்து மயங்கி விழுவது போல நூதன போராட்டம்


கதிராமங்கலம் பிரச்சினையில் அரசை கண்டித்து மயங்கி விழுவது போல நூதன போராட்டம்
x
தினத்தந்தி 12 July 2017 4:30 AM IST (Updated: 12 July 2017 12:44 AM IST)
t-max-icont-min-icon

கதிராமங்கலம் பிரச்சினையில் மத்திய- மாநில அரசுகளை கண்டித்து கிராம மக்கள் வயலில் மயங்கி விழுவது போல நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் குழந்தைகளுடன் பெண்கள் பங்கேற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவாலங்காடு,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கதிராமங்கலம் கிராமத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேற வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் மக்களுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

நேற்று மக்கள் சேவை இயக்கம் விவசாய பிரிவு தலைவர் தங்கசண்முகசுந்தரம், மாநில துணைத் தலைவர் வரதராஜன், துணைச் செயலாளர் மணிகண்டன் ஆகியோர் கதிராமங்கலம் கிராமத்துக்கு வந்து மக்களை சந்தித்து பேசினர். அப்போது விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை மத்திய- மாநில அரசுகள் நிறைவேற்றி தராமல் ஒருவரைஒருவர் குற்றம் சாட்டும் வகையில் பதில் அளித்து வருவதாக மக்கள் புகார் கூறினர்.

இதை வெளிப்படுத்தும் வகையில் கால்பந்தாட்டத்தில் பந்தை வீரர்கள் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு உதைத்து கடத்துவது போல, விவசாயிகளை கால்பந்து போல சித்தரித்து ஒரு பகுதியை மத்திய அரசாகவும் மற்றொரு பகுதியை மாநில அரசாகவும் கருதி அந்த பந்தை உதைத்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இறுதியில் விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேறாத நிலையில் வயலில் மயங்கி விழுவது போல நடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பெண்கள் கைக்குழந்தைகளுடன் பங்கேற்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது மக்கள் சேவை இயக்கத்தினர், ஓ.என்.ஜி.சி. ஆய்வு பணிகள் தொடர்ந்தால் கதிராமங்கலம் பாலைவனமாக மாறிவிடும் என்றும் தற்போதைய சட்டசபை கூட்டத்தொடரிலேயே விவசாயிகள் மற்றும் கதிராமங்கலம் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டனர். 

Related Tags :
Next Story