வால்பாறையில் மழை குறைந்தது: பொள்ளாச்சி பாசன திட்டத்துக்கு பாதிப்பு வருமா?


வால்பாறையில் மழை குறைந்தது: பொள்ளாச்சி பாசன திட்டத்துக்கு பாதிப்பு வருமா?
x
தினத்தந்தி 12 July 2017 4:00 AM IST (Updated: 12 July 2017 1:13 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறை பகுதியில் மழை குறைந்து வருகிறது. இதனால் பொள்ளாச்சி பாசன திட்டத்துக்கு பாதிப்பு வருமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

வால்பாறை

வால்பாறை பகுதியில் கடந்த ஜூன் மாதம் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கியது. இந்த பருவமழை ஜூன் மாதத்தின் இறுதி வாரத்தில் மிக கனமழையாக பெய்தது. இதனால் வால்பாறை பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வால்பாறை சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஆறுகள், நீர்வீழ்ச்சிகளுக்கு தண்ணீர்வரத்து அதிகரித்து வெள்ளபெருக்கு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து நடப்பு மாதம் (ஜூலை) மாதம் தொடங்கியது முதல் வால்பாறை பகுதியில் மழை குறைந்து வருகிறது. இதனால் ஆறுகள், நீர்வீழ்ச்சிகளுக்கு வரும் தண்ணீரின் அளவும் குறைந்துவிட்டது. இதனால் பரம்பிக்குளம்–ஆழியார் திட்டத்தின் (பி.ஏ.பி.பாசன திட்டம்) அடிப்படை அணையாக விளங்கும், வால்பாறையில் உள்ள சோலையார் அணைக்கு வரும் தண்ணீரின் அளவும் குறைந்துவிட்டது.

160 அடி கொள்ளளவு கொண்ட சோலையார்அணையின் நீர்மட்டம் கடந்த 2 –ந் தேதி 87 அடியை எட்டியது. பின்னர் மழை குறைந்து விட்டதாலும், மின் உற்பத்திக்குப்பின் கேரளாவிற்கும், மின்உற்பத்தி செய்யப்படாமல் மாற்றுப்பாதை வழியாக பரம்பிக்குளம் அணைக்கும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுவருவதாலும், அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.

இது தவிர தென்மேற்கு பருவமழை தீவிரத்தன்மையை இழந்ததாலும், தற்போது சோலையார் அணையின் நீர்மட்டம் மட, மடவென குறைந்து 72 அடியாக உள்ளது. இந்த அணையில் இருந்து மின்நிலையம்–2 இயக்கப்பட்டு வருகிறது. இதனால் 733 கனஅடித்தண்ணீர் மின்உற்பத்திக்குப்பின் கேரளாவிற்கு திறந்துவிடப்பட்டு வருகிறது. மின்நிலையம்–1–ல் மின்உற்பத்தி செய்யப்படவில்லை. இதனால்மாற்றுப்பாதை வழியாக 848 கனஅடித்தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு திறந்து விடப்பட்டுவருகிறது.இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:–

இந்த ஆண்டு வால்பாறையில் எதிர்பார்த்த தென்மேற்கு பருவமழை பெய்யாமல் ஏமாற்றத்தை தருகிறது. கடந்த மாதம் பெய்த மழை ஓரளவுக்கு தாக்கு பிடித்து உள்ளது. ஆனால் தொடர்ந்து மழை பெய்யாமல் உள்ளதால் வால்பாறை பகுதியில், தற்போது தண்ணீர் தட்டுப்பாடு இல்லை என்றாலும், அடுத்தடுத்த மாதங்களில் தட்டுப்பாடு பிரச்சினை ஏற்படக்கூடும். வால்பாறையின் முக்கிய அணையாக சோலையாறு அணை உள்ளது. கடந்த மாதங்களில் பெய்த மழை சோலையாறு அணைக்கு கிடு, கிடுவென நீர்மட்டத்தை உயர்த்துவதாக இருந்தது. ஆனால் தற்போது மழை குறைந்து விட்டது. அணையை பொறுத்தவரை தொடர்ந்து மழை பெய்ய வேண்டும். அப்போது தான் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும்போது, தண்ணீர் குறையாமல் இருக்கும். தற்போது மழை இல்லாத காரணத்தால் அணையில் தண்ணீர் குறைந்து வருவதால் இந்த ஆண்டும் சோலையார்அணை நிரம்புவதற்கு வாய்ப்பு இல்லாத நிலையே உருவாகி உள்ளது. அணை நிரம்பினால்தான் பரம்பிக்குளத்துக்கு தண்ணீர்தாராளமாக செல்லும்.இந்த மழை குறைவானது என்றாலும் தொடர்ந்து பெய்தால் மட்டுமே சோலையாறு அணை நிரம்பும். ஆனால் அதற்குரிய அறிகுறிகள் எதுவும் இல்லை.

எதிர்பாராமல் பெய்யும் மழையும் பலத்த மழையாக பெய்யாமலே உள்ளது. சோலையாறு அணையில் இருந்து பரம்பிக்குளம் அணைக்கும், பின்னர் சர்க்கார்பதியில் மின் உற்பத்தி செய்யப்பட்டு, அந்த தண்ணீர் காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு சென்றடைகிறது.

இதற்கிடையில் மற்றொரு ஊட்டு கால்காய் மூலம் சர்க்கார்பதியில் இருந்து ஆழியாறுக்கு தண்ணீர் செல்கிறது. இதனை தொடர்ந்து ஆழியாற்றில் இருந்து பொள்ளாச்சி பகுதி பாசன திட்டமான பி.ஏ.பி.பாசனத்திட்டத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மேலும் பொள்ளாச்சி ஆழியாற்றுக்கு வால்பாறை பகுதியில் உள்ள அப்பர் ஆழியாறு மூலமே தண்ணீர் கிடைக்கிறது. இந்த அப்பர் ஆழியாற்றுக்கு தண்ணீர் குறைவில்லாமல் இருக்க வேண்டும் என்றால் வால்பாறையில் மழை குறைவில்லாமல் பெய்ய வேண்டும். ஆகவே சோலையாறும், அப்பர் ஆழியாறும் பொள்ளாச்சி பகுதியில் உள்ள சமவெளிப்பகுதிகளின் நீர்பாசன ஆதாரங்களாக உள்ளன.

இந்த வகையில் பொள்ளாச்சி சமவெளிப்பகுதிகளின் விவசாயத்துக்கு சோலையாறு அணையின் நீர்மட்டமும் கைகொடுப்பதாகவே உள்ளது. ஆனால் தற்போது, வால்பாறையில் மழை தீவிரம் காட்டாத பட்சத்தில் சோலையாறு அணையில் இருந்து இன்னும் 10 நாட்களுக்குத்தான் தண்ணீர் திறந்து விடப்படும் என்ற சூழ்நிலை நிலவுகிறது. அதன் பின்னர் நிறுத்தப்படும். ஆகவே ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது வால்பாறையில் மழை குறைந்ததால் பொள்ளாச்சி பகுதி பாசன திட்டத்துக்கு பாதிப்பு வருமா? என்ற கேள்விக்குறியை ஏற்படுத்தி உள்ளது. இது தவிர குடிநீர் திட்டங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்று தெரிகிறது.

ஆனால் தற்போதையை மழையின் தயவு வால்பாறைக்கு குடிநீர் பிரச்சினையை ஒரளவு சமாளிக்க உதவிகரமாக உள்ளது. அங்குள்ள அக்காமலை தடுப்பணையில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதன் மூலம் வால்பாறை குடிநீர் வினியோகம் தடைபடாமல் இல்லாமல் உள்ளது. தேயிலை தோட்டத்தை பொறுத்தவரை தற்போது பெய்துள்ள மழை போதுமானது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்

இதற்கிடையில் கடந்த 24 மணி நேரத்தில் வால்பாறையில் 4 மி.மீ மழையும், சோலையார்அணையில் 13 மி.மீ மழையும், சின்னக்கல்லாரில் 7 மி.மீமழையும், நீராரில் 2 மி.மீமழையும் பெய்துள்ளது. வால்பாறையில் தற்போது மழை குறைந்த போதும் அவ்வப்போது பெய்துவரும் நிலையில், சோலையார் எஸ்டேட் பகுதியில் உள்ள பிர்லா நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது. இது தவிர சில நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் கொட்டினாலும் மிக குறைந்த அளவிலே கொட்டும் நிலை உள்ளது. அதிகளவில் தண்ணீர் கொட்டுவதற்கு மழை தீவிரம் அடையுமா? என்ற கேள்விக்குறி உள்ளது.


Related Tags :
Next Story