வாலிபர்களை விடுவிக்கக்கோரி போலீஸ் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகை
விருத்தாசலம் அருகே பரபரப்பு வாலிபர்களை விடுவிக்கக்கோரி போலீஸ் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகை–மறியல்
விருத்தாசலம்,
விருத்தாசலம் அருகே உள்ள பேரலையூர் கிராமத்தை சேர்ந்த வாலிபர்கள் 10 பேர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நேமம் கிராமம் வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றனர். அப்போது அவர்கள் வேகமாகவும், கூச்சல் போட்டுக் கொண்டும் சென்றதாக கூறப்படுகிறது. இதை பார்த்த நேமம் கிராமத்தை சேர்ந்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை வழிமறித்து அவர்களுடன் தகராறு செய்தனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த அப்பகுதி மக்கள் இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் நேமத்தை சேர்ந்த வாலிபர்கள் சிலர் கருவேப்பிலங்குறிச்சியில் உள்ள ஒரு கடைக்கு சென்றனர். அப்போது அங்கு வந்த பேரலையூரை சேர்ந்த வாலிபர்களுக்கும், நேமத்தை சேர்ந்த வாலிபர்களுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் இருதரப்பினரும் ஒருவரையொருவர் திட்டி தாக்கிக்கொண்டனர்.
இதுகுறித்து புகார் கொடுப்பதற்காக நேமம் கிராம மக்கள் கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் நிலையத்துக்கு சென்றனர். ஆனால் அங்கு போலீசார் புகாரை பெற்றுக்கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரனிடம் புகார் தெரிவித்தனர். அதன் பேரில் அவர் இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
இந்த நிலையில் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் நேமம் கிராமத்தை சேர்ந்த திருமூர்த்தி (வயது 24), சக்திவேல்(25), ராஜா(23), ராசுகுட்டி(18), ராஜமூர்த்தி(19) மற்றும் பேரலையூர் கிராமத்தை சேர்ந்த வாலிபர்கள் சிலரையும் நேற்று முன்தினம் இரவு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
இதுபற்றி அறிந்த நேமம் கிராம மக்கள் நேற்று காலை போலீஸ் நிலையத்துக்கு திரண்டு சென்றனர். பின்பு அவர்கள் போலீசார் அழைத்து வந்த வாலிபர்களை விடுவிக்கக்கோரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து அவர்கள் விருத்தாசலம்–ஜெயங்கொண்டம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன், மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சாலை மறியலை கைவிடுமாறு சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதை தொடர்ந்து கிராம மக்கள் மறியலை கைவிட்டு சாலையோரம் திரண்டு நின்று போராட்டம் நடத்தினர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த விருத்தாசலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் மற்றும் போலீசார் கிராம மக்களை அங்கிருந்து கலைந்து செல்லும்படி கூறினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து கோஷங்களை எழுப்பிக்கொண்டு இருந்தனர்.
இதையடுத்து போலீசார் அவர்களை அங்கிருந்து விரட்டினர். இதனால் கிராம மக்கள் நான்கு புறமும் சிதறி ஓடினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து அசம்பாவித சம்பவம் ஏதும் நடைபெறாமல் இருக்க, பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.