‘தனியார் மருந்து கடைகளில் மருந்துகள் வாங்க கட்டாயப்படுத்த கூடாது’ டாக்டர்கள், எச்சரிக்கை
அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகளை தனியார் மருந்து கடைகளில் மருந்துகள் வாங்க கட்டாயப்படுத்த கூடாது என்றும், மீறி அவ்வாறு செயல்படும் டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் மந்திரி யு.டி.காதர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொள்ளேகால்,
கர்நாடக மாநில உணவுத்துறை மந்திரியும், சாம்ராஜ்நகர் மாவட்ட பொறுப்பு மந்திரியுமான யு.டி.காதர் சாம்ராஜ்நகர் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின்பு மாவட்ட கலெக்டர் அலுவலத்தில் நடந்த சுகாதாரத்துறை அதிகாரிகளின் ஆய்வு கூட்டத்தில் அவர் கலந்துகொண்டார். இந்த ஆய்வு கூட்டத்திற்கு பின்பு மந்திரி யு.டி.காதர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் டெங்கு, வைரஸ் காய்ச்சல்கள் வேகமாக பரவி வருகிறது. எனவே அரசு ஆஸ்பத்திரிக்கு டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சை பெற வரும் நோயாளிகளின் எண்ணிக்கை குறித்து ஆய்வு நடத்தினேன். மேலும் டாக்டர்கள் வழங்கும் சிகிச்சைகள் குறித்து நோயாளிகளிடம் கேட்டறிந்தேன்.
அப்போது இரவு நேரங்களில் நோயாளிக்கு சிகிச்சை அளிக்க டாக்டர்கள் சரியாக ஆஸ்பத்திரிகளில் இருப்பது இல்லை எனவும், சில டாக்டர்கள் தனியார் மருந்து கடைகளில், மருந்துகளை வாங்க கட்டாயப்படுத்துவதாகவும் நோயாளிகள் புகார் தெரிவித்து உள்ளனர். மேலும் அரசு ஆஸ்பத்திரியில் சுகாதார சீர்கேடு நிலவுவதாகவும் கூறி உள்ளனர்.
பணி நீக்கம் செய்ய...இந்த புகாரை தொடர்ந்து அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப டாக்டர்கள் பணியில் இருக்க உத்தரவிட்டு உள்ளேன். இதேபோல் ஆஸ்பத்திரி வளாகத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள அறிவுரை வழங்கி உள்ளேன்.
அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகளை, தனியார் மருந்து கடைகளில், மருந்துகள் வாங்கும்படி கட்டயாப்படுத்தும் டாக்டர்கள் மற்றும் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் படி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.